இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த எதிர்ப்பு... சென்னை உயர் நீதிமன்றதுக்கு சென்ற அதிமுக.!

By Asianet TamilFirst Published Sep 17, 2021, 9:08 PM IST
Highlights

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் காலியாக உள்ள 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 13-ஆம் தேதி வெளியிட்டது. இதன்படி செப்டம்பர் 15 அன்று வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அக். 22 வரை வேட்பு மனுக்கள் பெறப்பட உள்ளன. இந்நிலையில் 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கோரிக்கையும் வைத்தது. இதற்கிடையே அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.


அந்த மனுவில், “இத்தேர்தல் மாநிலம் முழுவதும் நடைபெறவில்லை. 9 மாவட்டங்களுக்கு மட்டுமே  நடைபெறுகிறது. எனவே, 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்த எந்தக் காரணமும் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலே ஒரே கட்டமாகத்தன் நடைபெற்றது. 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலை இரு கட்டங்களாக நடத்துவது கள்ளஓட்டுப் போடுவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு வாய்ப்பாகப் போய்விடும். உள்ளாட்சித் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற, ஆளும் கட்சி ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும். தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்கவும், கொரோனா விதிகளை அமல்படுத்தவும் வலியுறுத்தி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி 14-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். 
திமுக ஆட்சியில் 2006-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தற்போது இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதால் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை மனுவை மாநிலத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவும், தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடைபெற நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!