அவதூறு வழக்கு.. முதல்வரை நேரில் ஆஜராகுமாறு நிர்பந்திக்க கூடாது.. சிறப்பு கோர்ட்டுக்கு எதிராக சீறிய ஐகோர்ட்.!

By vinoth kumarFirst Published Sep 17, 2021, 7:20 PM IST
Highlights

சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு, வாக்கி டாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தற்போதைய முதல்வரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அரசுக்கு எதிராகவும், முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியதாக, 17 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டது.

அவதூறு வழக்குகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2011 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு, வாக்கி டாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தற்போதைய முதல்வரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அரசுக்கு எதிராகவும், முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியதாக, 17 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டது.

இந்நிலையில்  தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற உடன் கடந்த ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்ப பெறப்படும் என அறிவித்தது. இது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ-களுக்கு எதிரான குற்ற வழக்குகளை திரும்ப பெரும் முன்னர் சம்மந்தபட்ட மாநில உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 17 அவதூறு வழக்குகளை திரும்ப பெற தற்போது தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடபட்டது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின்க்கு எதிராக நிலுவையில் உள்ள 17 கிரிமினல் அவதூறு வழக்குகளைத் திரும்ப பெறுவது தொடர்பான அரசாணை தாக்கல் செய்யபட்டது.

அப்போது நீதிபதி நிர்மல்குமார் வழக்குகள் தொடர்பான விபரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்குகளில் மு.க.ஸ்டாலினை நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு தெரிவித்த நீதிபதி மனு மீது அடுத்த மாதம் 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

click me!