கோவாவில் காங்கிரஸ் ஓட்டைக் கரைக்க வரிசைக் கட்டும் எதிர்க்கட்சிகள்... பாஜகவை ஜெயிக்க வைக்க போட்டாபோட்டி.!

By Asianet TamilFirst Published Jan 17, 2022, 9:41 PM IST
Highlights

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மகாராஷ்டிரவாடி கோமந்த கட்சி எனப் பல கட்சிகள் தனித்தனியாக களம் காணுவதால் எதிர்க்கட்சிகளின் ஓட்டுகள் சிதறும் நிலை கோவாவில் ஏற்பட்டுள்ளது.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக களம் காண்பதால், பாஜகவின் கை ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கோவாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டில் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிபெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது.  அந்தத் தேர்தலில் காங்கிரஸ் மட்டும் 17 தொகுதிகளில் வென்றது. என்றாலும் பிற கட்சி மற்றும் சுயேட்சை ஆதரவுடன் பாஜக ஆட்சியைப் பிடித்தது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பாஜகவை எப்படியும் வீழ்த்தி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அக்கட்சி தேர்தல் பொறுப்பாளராக ப. சிதம்பரத்தைக் களமிறக்கியுள்ளது. இத்தேர்தலில் பாஜக ஓர் அணியாக களமிறங்குகிறது. இதேபோல காங்கிரஸ் கட்சியும் தனி அணியாக களம் இறங்குகிறது.

கோவாவில் எப்படியும் அதிர்வலைகளை ஏற்படுத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் களமிறங்கியுள்ளது,. இதற்காக கோவாவில் திரிணாமூல் கட்சி எம்.பி.க்கள் தீயாகப் பணியாற்றி வருகிறார்கள். இக்கட்சியும் மகாராஷ்டிரவாடி கோமந்த கட்சியும் தேர்தலில் களமிறங்க உள்ளன. இக்கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்று கடந்த வாரம் வரை தகவல்கள் வெளியாயின. ஆனால், கோவாவில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி தனியாகவே களமிறங்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவும் ஓர் அணியாக கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் குதித்துள்ளன.

இந்த இரு கட்சிகளும் மகாராஷ்டிராவில் காங்கிரஸோடு சேர்ந்து கூட்டணி ஆட்சியில் உள்ளன. எனவே, இந்த இரு கட்சிகளும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. எனவே தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா தனி அணியாக கோவாவில் போட்டியிடுகின்றன. இதை சிவசேனா எம்.பி. ராவத்தும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் சிவசேனா - தேசியவாத காங்கிரஸை சேர்க்காததால், காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்கத்தில்தான் கோவாவில் வெற்றி பெறும் என்று ராவத் தெரிவித்துள்ளார். இதேபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ளது.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மகாராஷ்டிரவாடி கோமந்த கட்சி எனப் பல கட்சிகள் தனித்தனியாக களம் காணுவதால் எதிர்க்கட்சிகளின் ஓட்டுகள் சிதறும் நிலை கோவாவில் ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் பாஜக சுலபமாக வெற்றி பெறும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

click me!