
நகை கடன்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சீரமைக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றார். இந்தநிலையில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கூட்டுறவு வங்கியில் ஏராளமானோர் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடாக நகை கடன் பெற்றுள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு உண்மையான பயனாளிகளுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிவித்திருந்தார்.
நகைக்கடன் மோசடியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்திருந்த நிலையில் நகைக்கடன் மோசடியில் திமுக-வை சேர்ந்த சிலரும் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.