
பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் மக்கள் படும் துயரத்தை பற்றி தமிழக அரசுக்கு கவலை இல்லை எனவும் பாஜகவின் தலையாட்டி பொம்மையாக இந்த அரசு செயல்படுவதாகவும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து கொண்டு வரும் நிலையிலும், பாஜக அரசு தினமும் விலை நிர்ணயம் என்ற கொள்கையின் அடிப்படையில், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது தாங்கமுடியாத சுமையைத் தூக்கி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்தியில் உள்ள பாஜ அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் போதெல்லாம் மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் அதற்குத் துணையாக, வாய்மூடி மவுனியாக இருப்பது மட்டுமின்றி, மத்திய அரசு திணிக்கும் சுமையை அப்படியே அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு கைமாற்றி அனுப்பி விட்டு கை கழுவுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில், பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது எனவும், தற்போது குஜராத் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் மீதான வாட் வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 1 ரூபாயும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பாஜகவின் தலையாட்டி பொம்மையாக செயல்படும் தமிழக அரசு மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுபற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கதக்கது எனவும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கோ, அமைச்சர்களுக்கோ தமிழக மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலையில்லை எனவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.