
முதல்வர் பழனிசாமிக்கு சராசரி அறிவுகூட இல்லையே என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஓகி புயலால் பயிர்கள் சேதமடைந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். புயலால் சேதமடைந்த ரப்பர் மற்றும் வாழை ஆகிய மரங்களுக்கான உற்பத்தி செலவை கணக்கிட்டு அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆடம்பர விழாக்களை நடத்துவதை தவிர்த்து முதல்வரும் அமைச்சர்களும் குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
பேனர் வைக்க நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மையமாக வைத்து அதிமுக அரசை திமுக விமர்சித்துவருகிறது. அதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று கோவையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, கோவையில் திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த செம்மொழி மாநாட்டின்போது வைக்கப்பட்டிருந்த பேனர்களை காட்டி விமர்சித்திருந்தார்.
அதற்கு இன்றைய பேட்டியில் பதிலளித்த ஸ்டாலின், திமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டின் போது பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது உண்மைதான். ஆனால், அதில் ஒரு பேனரிலாவது திமுக தலைவர் கருணாநிதியின் இடம்பெற்றிருந்ததா? கிடையவே கிடையாது. கோவையில் எங்காவது கட்சி கொடி பறந்ததா? அதுவும் கிடையாது.
அது செம்மொழி மாநாடு என்பதால், தமித்தாயின் படங்கள், திருவள்ளுவர், பாரதியார் போன்றோரின் படங்களே இருந்தது. அதில் கருணாநிதியின் படமோ கட்சி சார்ந்த விஷயமோ கிடையாது. அதை புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு சராசரி அறிவுகூட முதல்வருக்கு இல்லையே என ஸ்டாலின் கிண்டலாக விமர்சித்தார்.