தமிழகத்தில் ஸ்டாலின்-ராகுல் மாயாஜாலம்.. எதிர்க்கட்சிகள் திரண்டால் 2024-ல் ஜமாய்க்கலாம்.. காங்கிரஸ் கணக்கு!

By Asianet TamilFirst Published Mar 14, 2022, 10:10 PM IST
Highlights

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவித்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள வியூகம் வகுத்தார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், 38 தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றார்கள்.

தமிழகத்தில் நடக்கும் அணுகுமுறையை தேசிய அளவிலும், பல மாநிலங்களிலும் பின்பற்றி பாஜகவுக்கு எதிராக கொள்கை சார்ந்த வலுவான கூட்டணி அமையுமேயானால், 2024 மக்களவைத் தேர்தலில் மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பக கே.எஸ். அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “5 மாநில தேர்தல் தோல்விக்கு பிறகு நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் 4 மணி நேர விவாதத்திற்கு பிறகு சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி தலைமை மீது முழு நம்பிக்கை வைத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். ஐந்து மாநில தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 2-வது பெரிய கட்சியாக இடம் பெற்றிருக்கிறது. எதிர் கட்சிகளின் ஒற்றுமையின்மையின் காரணமாகவேத் தான் ஏற்கனவே நான்கு மாநிலங்களில் ஆட்சியிலிருந்த பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் ஏற்கனவே பெற்ற வெற்றியை விட குறைவான எண்ணிக்கையில்தான் வெற்றியை பெற்றுள்ளது. கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலைவிட குறைவான வாக்கு சதவீதத்தைதான் பா.ஜ.க. பெற்றிருக்கிறது.

இந்தத் தேர்தலை அனைத்து எதிர்கட்சிகளும் படிப்பினையாக கருதி, மீண்டும் பா.ஜ.க.வை வருகிற சட்டமன்றத் தேர்தலிலும், அடுத்து வருகிற 2024 மக்களவை தேர்தலிலும் தோற்கடிக்க ஓரணியில் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவித்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள வியூகம் வகுத்தார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், 38 தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றார்கள்.

தமிழகத்தில் பெற்ற வெற்றிக்கு தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இணைந்து எடுத்த கூட்டு முயற்சிதான் மகத்தான வெற்றிக்கு அடிப்படையாக அமைந்துவிட்டது. அத்தகைய அணுகுமுறையை தேசிய அளவிலும், பல மாநிலங்களிலும் பின்பற்றி பாஜகவுக்கு எதிராக கொள்கை சார்ந்த வலுவான கூட்டணி அமையுமேயானால், 2024 மக்களவைத் தேர்தலில் மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதியாகும். அதில் எவரும் எந்த சந்தேகமும் கொள்ள தேவையில்லை. 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்கிற வகையில் காங்கிரஸ் செயற்குழு செயல் திட்டங்களை வகுத்து இருக்கின்றன. நடத்தப்பட வேண்டிய அமைப்பு தேர்தல்களை முன்கூட்டியே ஜூலை மாதத்தில் தொடங்கி, ஆகஸ்டு 20-க்குள் முடிக்கிற கால அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதன்மூலம் வருகிற ஆகஸ்டு மாதத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் தலைவர் ராகுல்காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான காங்கிரஸ் கட்சியினரின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும். தலைவர் ராகுல்காந்தியின் தலைமையின் வழியாகவும்தான் பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கை நிறைவேற வேண்டுமானால் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்பதன் மூலமே ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் தேசிய அளவிலான நோக்கங்கள் நிறைவேற முடியும்.” என்று அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!