வெங்காயம், உருளைக்கிழங்கு,சமையல் எண்ணெய்க்கு கூட இனி திண்டாட வேண்டியிருக்கும்:வேளாண்துறை சட்டம் குறித்து பகீர்

By Ezhilarasan BabuFirst Published Sep 21, 2020, 1:03 PM IST
Highlights

வெங்காயம் ,உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள், பயிறு வகைகள் ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 இல் இயற்றப்பட்டது. இதன் வாயிலாக அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்து பதுக்கி, கேட்பை அதிகப்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடிய சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தள்ளது. இச்சட்டத்தினால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் .சிறு குறு விவசாயிகள் தங்களது நிலங்களை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். பன்னாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளைச் சுரண்டி கொழுக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெங்காயம் ,உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள், பயிறு வகைகள் ஆகியவை அத்தியா வசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் எந்த கட்டுப்பாடுமின்றி இந்த பொருட்களை குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து சேமித்து அதிக விலைக்கு விற்கக் கூடிய அபாயம் உருவாகும்.

 

எந்த நோக்கத்திற்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டம் இயற்றப்பட்டதோ அதை சீர்குலைக்கும் வகையில் தற்போது மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இச்சட்டத்தை திருத்தி உள்ளது. ஒருபுறம் விவசாயிகளுக்கான இலவசமின்சாரம் ரத்து எனும்அறிவிப்பு  , மற்றொருபுறம்  ஆன்லைன்  மூலம் விற்பனை, மால்கள் திறப்பு என திட்டமிட்டு செயல்படுகிறது மத்திய அரசு.

இவையெல்லாம் ஏதோ தற்போதுதான் நடைபெறுகிறதா என்றால் இல்லை. மத்திய அரசு பொறுப்பேற்றவுடன் பொது விநியோகத்திட்டத்தை செழுமைபடுத்துகிறோம் என்ற பெயரில் திரு. சாந்தகுமார் அவர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. குழு அளித்த பரிந்துரைகளைத்தான் தற்போது தொடர்ந்து அமுல்படுத்தி வருகிறது. அத்தகைய பரிந்துரைகளில் ஒன்று தான் இந்திய உணவு கழகத்தை (FCI)படிப்படியாக கலைத்து விடுவது, கொள்முதலை கைவிடுவது, விளைபொருட்களை விலை நிர்ணயிப்பதை கைவிடுதல், மாநில அரசு வழங்கக்கூடிய ஊக்கத் தொகையை கைவிடுதல் உள்ளிட்டவைதான் தற்போது நடைபெற்று வருகிறது. 

உலக வர்த்தகக் கழகத்தின்(WTO)அழுத்தம் காரணமாகவே முடிவெடுத்து செயல்படுகிறது மத்திய அரசு .பெரும் வணிக குழுமங்களுக்கு சந்தையைதிறந்துவிட உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது வேளாண்மைத் தொழிலை விட்டு வெளியேறுவது மட்டுமல்ல, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு கிடைத்துவரும் குறைந்தளவிலான பலன்களும்  கைவிடப்பட கூடும். சட்டதிருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் கிளர்ச்சியில் இறங்கியுள்ளனர்.

இச்சூழலில் தான் நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள மிருக பலத்தை வைத்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பில்லை என்பதனால் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு பெரும் அமளிகளுக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே சந்தை, ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே கார்டு, ஒரே நாடு ஒரே சட்டம்.என்பதை நிலைநாட்டவே சட்டதிருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது விவசாயிகளுக்கு மட்டுமல்ல,நாடு முழுக்க உள்ள பொது விநியோகத்திட்டத்தினை சீரழிக்கும் என தலைவர் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) தெரிவித்துள்ளது.  

 

click me!