நாங்குநேரி தொகுதியில் களமிறங்கும் திமுக..? ஆட்களைக் காட்டி தொகுதியைக் கேட்கும் காங்கிரஸ்!

By Asianet TamilFirst Published Aug 30, 2019, 7:05 AM IST
Highlights

வழக்கமான இடைத்தேர்தல் பார்மூலாவில் நடைபெறும் என்பதால், நாங்குநேரியில் திமுக போட்டியிட்டால்தான் அதிமுகவை வீழ்த்த முடியும் என்பது திமுகவின் எண்ணம். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் சிட்டிங் தொகுதி என்பதாலும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருப்பதாகவும் கூறி காங்கிரஸ் கட்சி அத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சித்துவருகிறது. 

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டே  தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக காங்கிரஸ், குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸை முன்னிறுத்தி திமுகவிடம் தொகுதியைப் பெற திட்டமிட்டுவருகிறது. 
 நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். கடந்த ஜூன் மாதம் முதல் இத்தொகுதி காலியாக உள்ளது. இத்தொகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் விரும்புகிறார்கள்.


ஆனால், வழக்கமான இடைத்தேர்தல் பார்மூலாவில் நடைபெறும் என்பதால், நாங்குநேரியில் திமுக போட்டியிட்டால்தான் அதிமுகவை வீழ்த்த முடியும் என்பது திமுகவின் எண்ணம். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் சிட்டிங் தொகுதி என்பதாலும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருப்பதாகவும் கூறி காங்கிரஸ் கட்சி அத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சித்துவருகிறது. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாதான் முடிவு செய்வார் என்று சில நாட்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்திருந்தார்.
இதேபோல நாங்குநேரி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே அத்தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. எனவே திமுக போட்டியிடுவதில் ஸ்டாலினும் ஆர்வமாக இருப்பது வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதியை திமுகவிடமிருந்து பெற காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் மூலம் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


தற்போது மிகவும் மூத்த தலைவராக விளங்கிவரும் குமரி அனந்தன் கருணாநிதியிடம் நெருக்கமாக இருந்தவர். முந்தைய திமுக அரசில் பனை நல வாரிய தலைவர் பதவியை குமரிஅனந்தனுக்கு கருணாநிதி வழங்கியிருந்தார். மேலும் தற்போதைய திமுக தலைமையுடனும் குமரி அனந்தன் நெருக்கமாக இருந்துவருகிறார். ‘கட்சி தலைமை உத்தரவிட்டால் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட தயார்’ என்றும் குமரி அனந்தன் அறிவித்துள்ளார். இதேபோல காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் திமுகவுடன் எப்போதும் நெருக்கமாக இருப்பவர் பீட்டர் அல்போன்ஸ். குமரிஅனந்தன் அல்லது பீட்டர் அல்போன்ஸை நாங்குநேரியில் களமிறக்கும்பட்சத்தில் திமுக நாங்குநேரியை வழங்க முன்வரும் என்ற யோசனை காங்கிரஸ் கட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே இவர்களில் ஒருவருக்கு சீட்டு என்ற அடிப்படையில் நாங்குநேரியைப் பெற்று இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டிவருகிறது. ஆனால், நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் செல்வாக்கு திமுகவுக்கு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது என்பதை நிரூபிக்க திமுகவும் திட்டமிட்டுள்ளது. எனவே நாங்குநேரியை அத்தனை சுலபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக்கொடுக்காது என்கிறார்கள் திமுகவில். இடைத்தேர்தல் அறிவிக்கும்போது நாங்குநேரி யாருக்கு என்பது தெரிந்துவிடும்.    

click me!