ஒரேநாடு ஒரே தேர்தல்: எல்லா மாநில சட்டமன்றத்தையும் கலைக்க' தில் ' இருக்கா.? மோடிக்கு கார்த்தி சிதம்பரம் சவால்.

By Ezhilarasan BabuFirst Published Dec 20, 2021, 12:07 PM IST
Highlights

ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தும் போது இந்தியாவில் அனைவருக்குமான வளர்ச்சியை ஊக்கப்படுத்த முடியும் என்றும், செலவுகளைக் கட்டுப்படுத்தி மக்கள் பணத்தைப் பாதுகாக்க வழிவகை செய்யப்படும் என்றும் மத்திய அரசு கூறி வருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்  என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும், அப்படிக் கொண்டுவந்தால் எல்லா மாநில சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டும், அப்படி செய்தால் அதற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பும் என காங்கிரஸ் கட்சி எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை விரைவில் கொண்டுவரப்பட உள்ளது என பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதுவரை இல்லாத அளவுக்கு அதிபெரும்பான்மையுடன் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அன்று முதல் மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து வருகிறது. ஜன்தன் நேரடி மானியத் திட்டம்,  சரக்கு சேவை வரிகள், டிஜிட்டல் இந்தியா திட்டம்,  தூய்மை இந்தியா திட்டம், ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்துள்ளது. இதில் ஒரு சில திட்டங்களை மக்கள் வரவேற்றாலும், பல திட்டங்களை மக்கள் கடுமையாக எதிர்த்தும் வமர்சித்தும் வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் உறுதியாக நின்ற மோடி அரசு தடுப்பூசி உற்பத்தியை தீவிரப்படுத்தி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருவது பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதனால் மோடி அரசின் மீதான நம்பிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல் தற்சார்பு பொருளாதாரம் என்ற முழக்கத்தை முன்வைத்து அதற்கான பல நடவடிக்கைகளில் மோடி அரசு இறங்கியுள்ளது. இதே வரிசையில் நாட்டில் எல்லாத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் தேர்தல் அட்டவணையை மாற்றுவது வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான மிக முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்றும் மத்திய அரசு முழங்கி வருகிறது. தற்போதுவரை சுழற்சி முறையில் நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது உள்ள தேர்தல் முறையால் ஆண்டு முழுவதும் நாட்டில் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைமுறை அமலில் இருந்துவரும் நிலை உள்ளது. இதனால் தேர்தல் அமலில் இருக்கும் போது அந்தந்த பகுதிகளில் தேர்தல் நடைமுறை காரணம் காட்டி வளர்ச்சித் திட்டங்களும் நலத் திட்டங்களும் செயல்படுத்துவது பாதிக்கப்படுகிறது. இதனால் நிர்வாகத்திற்கு பணிச்சுமை கூடுவதோடு, அரசின் கொள்கைகளை செயல்படுத்த முடியாமல் முடங்கும் நிலை ஏற்படுகிறது. அதே நேரத்தில் அதற்கான கூடுதல் செலவினங்களும் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.

எனவே ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தும் போது இந்தியாவில் அனைவருக்குமான வளர்ச்சியை ஊக்கப்படுத்த முடியும் என்றும், செலவுகளைக் கட்டுப்படுத்தி மக்கள் பணத்தைப் பாதுகாக்க வழிவகை செய்யப்படும் என்றும் மத்திய அரசு கூறி வருகிறது. 21 ஆம் நூற்றாண்டில் உலகின் முன்னணி நாடாக உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் சீர்திருத்தம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என அரசு கூறி வருகிறது. இதேபோல் கடந்த 2010 ம் ஆண்டு நாடாளுமன்ற த்திற்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடியும் அனைத்து மேடைகளிலும் ஒரே நாடு ஒரே திட்டம் காலத்தின் கட்டாயம் என பேசி வருகிறார். மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர்,  இந்த திட்டம் வெறும் விவாதப் பொருள் மட்டும் அல்ல இது காலத்திற்கான தேவை என வலியுறுத்தியுள்ளார். தற்போது நாடு முழுவதும் பாஜக மற்றும் அதற்கு ஆதரவான கட்சிகள் மத்தியில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கம் வலுப்பெற்றுள்ளது.

ஆனால் மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது, அக்கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் புறக்கணித்தனர். இந்நிலையில் தமிழகத்தைப் பொருத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த முயற்சியை எதிர்த்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக அரசை எதிர்த்து அதிமுக நடத்திய போராட்டத்தின்போது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு வரப்போகிறது, இன்னும் ஆட்சி இரண்டரை ஆண்டுகளில் திமுக ஆட்சி கலைக்கப்படும் என பேசியிருந்தார். இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட  உள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் விதிமுறை குறித்து மசோத கொண்டுவரப்பட உள்ளது. ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்றும், உள்நோக்கம் கொண்டது என்றும் எதிர்க்கட்சிகள் வசித்து வருகின்றன. இந்த மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ், திமுக இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில், டெல்லிக்கு செல்வதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்,

இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், இன்று கொண்டுவரப்பட உள்ளது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கான மசோதாவாக இருக்காது. வாக்காளர் எண்ணுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான மசோதாவாகவே இருக்கும்,  வாக்காளர்களில் போலியான பட்டியல் இருக்கக்கூடாது ஒருவருக்கு ஒரு இடத்தில்தான் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட இருக்கிறது.

அதேபோல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது, அப்படி ஒரு தேர்தலை நடத்த வேண்டும் என்றால் எல்லா மாநில சட்டசபைகளையும் கலைக்க வேண்டும். அதுபோன்ற எண்ணம் மத்திய அரசிடம் இருக்கலாம், ஆனால் அதைக் கொண்டு வந்து செயல்முறை படுத்த வாய்ப்பு இருக்காது. அடுத்த ஆண்டு 5  மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது, மத்திய பாஜக அரசு அதுபோல செய்தால் எதிர்ப்புகள் வலுவாக இருக்கும். சட்டசபையை நினைத்தவுடன் கலைக்க முடியாது, பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன காரணத்திற்காக சட்டசபையை கலைக்கலாம் என சில வழிமுறைகளை தந்துள்ளது. எனவே எல்லா சட்டசபையும் ஒரே நேரத்தில் டிஸ்மிஸ் செய்ய முடியாது. குறிப்பாக மத்திய அரசு கொண்டு வரும் சில சட்டங்கள் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் கார்டு இணைத்து போலி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தவிர்ப்பதற்காகவே இதை பார்க்க வேண்டும். மத்திய அரசின் எண்ணம் சர்வாதிகாரப் போக்குடன், எந்தவித விவாதமும் இல்லாமல் பெரும்பான்மையால் எதை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் என முடிவு எடுத்து வருகிறது. பணமதிப்பிழப்பு, வேளாண் சட்டங்கள், பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதிக்க தயாராக இல்லை, முரட்டு பெரும்பான்மை இருப்பதால் அந்த துணிச்சலுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. இவ்வாறு அவர் விமர்சித்தார்.

 

click me!