
பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 2-ஆவது முறையாக ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தலை அறிவித்தது. அதிமுக இரண்டாக உடைந்தது. ஓபிஎஸ் தலைமையில் பிரிந்து சென்ற அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக போட்டியிட்டார்.
அதிமுக அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். இரு அணிகளும் போட்டியிட்ட அந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆனால் வாக்காளர்களுக்கு வரலாறு காணாத அளவுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து இடைத் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.
தற்போது 7 மாதங்களுக்கு பிறகு அங்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் –ஓபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுசூதனனே மீண்டும் அந்த அணி சார்பில் களத்தில் இறங்கியுள்ளார்.
டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். எதற்காக கடந்த முறை இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதோ அதே பிரச்சனை தற்போது மீண்டும் தலைதுதூக்கியுள்ளது.
மீண்டும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று இதனைக்கண்டித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சாலை மறியலில் ஈடுபட்டார்.
இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 2-ஆவது முறையாக ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தேர்தல் நடத்த முடியாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சட்டம் ஒழுங்கு கெட்ட சூழலில் தமிழக அரசு என்றும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலின் போது பணப்பட்டுவாடா, முறைகேடு என பல குற்றச்சாட்டுகளை எழுப்பிய பாஜக தலைவர்கள் தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர். அதே போல் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது பாஜக தலைவர்கள் தமிழிசை, எஸ்.வி.சேகர் போன்ற பாஜகவினர் சொல்லத் தொடங்கியுள்ளனர். முன்கூட்டியே பாஜகவினர் சங்கு ஊதியுள்ளதால் திரும்பவும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிடுமோ என ஆர்.கே.நகர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.