மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா ! கர்நாடகாவில் தொடரும் குழப்பம் !

By Selvanayagam PFirst Published Jul 10, 2019, 9:50 PM IST
Highlights

கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. பதவி விலகியதால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது. ராஜினாமா செய்தவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் காங்கிரஸ் கடிதம் கொடுத்துள்ளது.

கர்நாடகத்தில் முதலமைச்சர்  குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 

இக்கூட்டணியில் அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் கடந்த 6-ந் தேதி தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதுபோல் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

ஏற்கனவே ஜிந்தால் நில விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் கடந்த 1-ந் தேதி ராஜினாமா செய்திருந்தார். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பின்னணியில் பாஜக  இருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து நேற்று பரிசீலனை செய்வதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார். இதனால் கூட்டணி ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதாவது, பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. 

இந்த நிலையில் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அமைச்சர்களாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான எச்.நாகேசும், ஆர்.சங்கரும் நேற்று முன்தினம் வாபஸ் பெற்றனர். இதற்கான கடிதத்தை கவர்னர் வஜூபாய் வாலாவிடம் அவர்கள் வழங்கியுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

இதனால் கூட்டணி ஆட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 104 ஆக குறைந்துவிட்டது. அதே வேளையில் பா.ஜனதாவின் பலம் 107 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து கர்நாடக கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் கூட்டணி அரசு தப்புமா? இல்லை கவிழுமா? என்ற கேள்வி  எழுந்துள்ளது.
 

click me!