போர்க்களமாக மாறிய தூத்துக்குடி.. முற்றியது ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்!! போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் பலி

First Published May 22, 2018, 12:39 PM IST
Highlights
one died in police firing during sterlite protest


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்தி தடுக்க முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு என தூத்துக்குடியில் போராட்டம் முற்றியுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், ஏற்கனவே இருக்கும் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம், திருவகுண்டம் உள்ளிட்ட ஊர்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நேற்றே 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்திருந்தார்.

அதன்படி, 21-ம் தேதி இரவு 10 மணி முதல் 23-ம் தேதி காலை 8 மணி வரை தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 

ஆனால் 144 தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மடத்தூரிலிருந்து பேரணியாக புறப்பட்டு ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அங்கு, ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த ஏராளமான போலீஸார், தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே, மற்றொரு போராட்டக் குழுவினர் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட போராட்டக்காரர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

போலீசாரின் தடியடியால் கொதிப்படைந்த போராட்டக்காரர்கள், போலீஸ் வாகனத்தை கவிழ்த்துவிட்டனர். போலீசார் தடியடி நடத்தியதால், போராட்டக்காரர்களும் கல் வீசி தாக்குதல் நடத்தினர். சில வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் முற்றியது. அதனால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் பலியானார். போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதால் போராட்டக்காரர்கள் மேலும் கொதிப்படைந்தனர். இதனால் தூத்துக்குடியே போர்க்களமாக காட்சியளிக்கிறது. 
 

click me!