
நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒரு வார்டு கவுன்சிலர் தேர்தலில் நிற்க ஒரு நபர் ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்தாக வேண்டும் என்று கூறுகின்றனர். அவ்வளவு பணம் செலவு செய்தால் அந்த வார்டில் ஜெயித்து வரும் உறுப்பினர் அந்த பணத்தை மக்களிடமிருந்து தான் கொள்ளை அடிப்பார்கள் என நடிகர் டி.ராஜேந்தர் விமர்சித்துள்ளார். தற்போது உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில் கொரோனா குறைந்துவிட்டதாக அரசு கூறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் வருவதால் கொரோனா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றபோது இரண்டாவது அலை தீவிரமாக இருந்தது. ஆனால் அரசு முன்னெடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஏராளமான மக்கள் தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டனர். இது தமிழக அரசின் ஆறு மாத சாதனைகளில் முதல் சாதனையாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மூன்றாவது அலை இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், டெல்டா வகை வைரஸ் ஒமைக்ரான் என மாறி மாறி மக்களை கடுமையாக பாதித்து வருகிறது.
இந்த வைரஸை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு என தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தது அதன் விளைவாக தற்போது வைரஸ் தொற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. தினசரி எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் முகக் கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டுமென சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. வேகவேகமாக இடப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் கட்சிகள் அடித்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டிருப்பது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் வந்தவுடன் கொரோனா வைரஸ் குறைந்துவிட்டதாக அரசு கூறுகிறது என்றும், அதே தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ் வந்துவிட்டது என அரசு கூறுவதும் வாடிக்கையாகி விட்டது என பொது மக்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா மறைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய நடிகர் டி.ராஜேந்தர். அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் சரமாரியாக விமர்சித்துள்ளார். குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வார்டு உறுப்பினர் ஒன்னரை கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்வதாகவும், அப்படி செலவு செய்யும் பணத்தை அவர்கள் மக்களிடம் இருந்து தான் எடுப்பார்கள் என்றும், மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா வைரசை காரணம் காட்டி பொங்கல் பண்டிகையின் போதெல்லாம் கோவில்கள் மூடப்பட்டது. ஆலயங்கள் மூடப்பட்டது, மசூதிகள் மூடப்பட்டது, ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஆலயங்களுக்கு மக்கள் வந்தால் கொரோனா தொற்றிக்கொள்ளும் என்று சொன்ன அரசு டாஸ்மாக்கை சுதந்திரமாக செயல்பட விட்டது. ஏன் டாஸ்மாக் கடைக்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்றிக் கொள்ளாதா. ஓமிக்ரான் வைரஸால் ஏழைமக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் டாஸ்மாக்கில் சிலர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒமைக்ரான் பரவலால் வார இறுதி நாட்கள் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போடப்பட்டது. இப்போது உள்ளாட்சி மன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் எல்லா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. அப்படியென்றால் தமிழ்நாட்டிலிருந்து கொரோனா விடைபெற்று சென்று விட்டதா?
தொற்றுநோய் இனி நாங்கள் வரமாட்டோம், வெளிநாட்டுக்கு செல்கிறோம் என்று சொல்லி விட்டதா? யாரும் முகக் கவசம் அணிய வேண்டாம், உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தலாம் என கொரோனா கூறி விட்டதா? இந்தத் தேர்தல் நடத்தி முடிக்கும் மார்ச் மாதம் வரை நாங்கள் வெளியே போகிறோம் என்று கூறி விடைபெற்றுச் சென்று விட்டதா? என நான் கேட்கவில்லை மக்கள் கேட்கிறார்கள். நான் ஒரு காலத்தில் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவன், இப்போது சொல்கிறார்கள் ஒரு வாடும் கவுன்சிலருக்கு போட்டியிட வேண்டுமென்றால் ஒன்னரை கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்கிறார்கள். அவ்வளவு பணத்தை ஒருவர் செலவு செய்கிறார் என்றால், அந்த வார்டில் ஜெயித்து வரக்கூடிய கவுன்சிலர்கள் எத்தனை கோடிக்கு சம்பாதிப்பார்கள். யாரிடத்தில் இருந்த அந்த பணத்தை எடுப்பார்கள். அது யார் பணம் மக்களின் வரிப்பணம்.
பொங்கலுக்கு தொகுப்பு கொடுத்தால் அந்த பொருட்கள் தரமாக இல்லை இதை நான் கேட்கவில்லை மக்கள் கேட்கிறார்கள். பொங்கலுக்கு பணம் கொடுக்கவில்லை ஏன் பணம் கொடுக்கவில்லை? இதே நான் கேட்கவில்லை மக்கள் கேட்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னீர்களே ஏன் செய்யவில்லை. இதையும் மக்கள் கேட்கிறார்கள். லாவண்யா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட உடன் அது மதமாற்றம் என்று சொல்லி அதற்கு சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை என சொல்லி சிபிஐக்கு அந்த வழக்கு மாற்றப்பட்டு இருக்கிறதே ஏன் இந்த நிலை. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.