
2019 ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கே வாக்களிப்போம் என 79 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் மத்திய அரசு மீது மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த பெருளாதார வளர்ச்சியும் குறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகளில், டைம்ஸ் குழுமத்தின் 10 ஊடக அமைப்புக்கள் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தி உள்ளன. இதில், இன்று நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தினால் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்கப்பட்டது.
இதில், 2019 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கே வாக்களிக்க போவதாக 79 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12 ஆம் தேதி முதல் 15 வரை மூன்று பாகங்களாக ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த கருத்துகணிப்பில் ஏறக்குறைய 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஓட்டளித்துள்ளனர்.
இந்த கருத்துகணிப்பு முடிவுகளின்படி, மோடிக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சி கட்சியின் ராகுலை நிறுத்தினால் அக்கட்சிக்கு வாக்களிப்போம் என 20 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
ராகுல் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு 58 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். புதிய வாக்காளர்களை ராகுல் கவர்வார் என 34 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்றாலும் பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சியை ஏற்க தயாராக இல்லை என 73 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவரானாலும் அக்கட்சிக்கு ஓட்டளிக்க தயாராக இல்லை என 38 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மோடி, பிரதமர் வேட்பாளராக இல்லை என்றால் பாஜகவிற்கு ஓட்டளிக்க மாட்டோம் என 31 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.