
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், ராகுல் காந்தி தலைவராக பதவியேற்றுக் கொண்டார். அதற்கான சான்றிதழ் அவரிடம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 19 ஆண்டுகளாக சோனியா காந்தி இருந்துவந்தார். அண்மைக்காலமாக அவருக்கு உடல்நலம் குன்றி இருப்பதால், கட்சியின் முக்கிய முடிவுகளை அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்திதான் எடுத்துவருகிறார். எனவே அவரையே கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற குரலை அக்கட்சியின் நிர்வாகிகள் எழுப்பி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பை அக்கட்சியின் காரிய கமிட்டி சமீபத்தில் அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி கடந்த 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். காங்கிரஸ் தலைவராக வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
எனவே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 11ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.