ஆளுங்கட்சியின் உதவியுடன் கொள்ளை லாபம் அடிக்கும் ஆம்னி பேருந்துகள்... எடப்பாடி மீது பாயும் கே.எஸ். அழகிரி..!

Published : Oct 23, 2019, 06:01 PM IST
ஆளுங்கட்சியின் உதவியுடன் கொள்ளை லாபம் அடிக்கும் ஆம்னி பேருந்துகள்... எடப்பாடி மீது பாயும் கே.எஸ். அழகிரி..!

சுருக்கம்

அதிமுக ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு தான். இத்தகைய ஒத்துழைப்பிற்காக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக ஆளுங்கட்சிக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. அதனால் இவர்கள் செய்கிற பல்வேறு அத்துமீறல்கள் மற்றும் முறைகேடுகளை கண்டும் காணாமல் இருக்கிற நிலை உள்ளது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக ஆளுங்கட்சிக்கு வழங்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்:- பண்டிகை காலங்களில் தமிழக மக்கள் பயணங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு பேருந்துகளை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருக்கிறார்.

அந்த பேருந்துகளில் இட வசதி இல்லாத காரணத்தால் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி வசூலிக்கிறார்கள். ஏறத்தாழ சென்னை மாநகரில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. சராசரியாக பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தகைய கட்டண வசூல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாக இணையதளத்தில் முன்பதிவு செய்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இத்தகைய கட்டணக் கொள்ளை குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? பண்டிகை காலங்களில் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள். இத்தகைய கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையை, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடித்து வருகிறார்கள். இத்தகைய கொள்ளை லாபத்தை தடுத்து நிறுத்த வேண்டிய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் பின்னணி என்ன? இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன.

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி இத்தகைய ஆம்னி பேருந்துகள் மீது பல்வேறு வழிகளில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை ஆம்னி பேருந்துகள் எந்தவித கட்டுப்பாடோ, ஒழுங்குமுறையோ இல்லாமல் தன்னிச்சையாக தங்களது விருப்பம் போல் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள்.

இதற்கு காரணம் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு தான். இத்தகைய ஒத்துழைப்பிற்காக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக ஆளுங்கட்சிக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. அதனால் இவர்கள் செய்கிற பல்வேறு அத்துமீறல்கள் மற்றும் முறைகேடுகளை கண்டும் காணாமல் இருக்கிற நிலை உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். எனவே, தனியார் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தும் பொதுமக்களின் நலனில் தமிழக ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருக்குமேயானால், உடனடியாக ஆம்னி பேருந்துகளின் பகிரங்க கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துகிற வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

லாட்டரி லீமா ரோஸின் 'மாஸ்டர் பிளான்': எடப்பாடியிடம் போட்ட டீல்..? அதிரும் அரசியல் களம்..!
அதிமுக கூட்டணியில் இணையும் விஜய்..? டெல்லி சமிக்ஞை..! இபிஎஸ் உற்சாகம்..!