
இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியிடுவதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்த போது, இன்று முற்பகல் திடீரென தில்லியில் அதிமுக., எம்பி., விஜயகுமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, இரட்டை இலைச் சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வழங்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்ட அறிவிப்பாணையை தம் கண்களால் பார்த்ததாகக் கூறினார்.
இதை அடுத்து, இந்தச் செய்தி அனைத்து தமிழ் ஊடகங்களிலும் விரைவாகப் பரவியது. ஆனால், தேர்தல் ஆணையமோ கடுப்பானது. இன்னமும் தாங்கள் இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் இப்படி ஊடகங்களில் செய்திகள் பரவியதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. ஆணையத்தின் தகவல் தொடர்பாளர் இதனை பகிரங்கமாகக் கூறினார்.
ஆனால், இது எதுவுமே காதில் விழாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, ஊடகங்களிடம் பேட்டி கொடுத்தார். தங்கள் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்துவிட்டதாகக் கூறி, தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில், தினகரன் தரப்பினர் ஊடகங்களிடம் பொருமித் தள்ளினர். இன்னும் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திராத நிலையில், இவர்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்றும், ஒருவேளை மத்திய அரசின் ஆசி இருப்பதால் இவர்களுக்கு தில்லியில் இருந்து போனில் செய்தி வந்ததோ என்றும் தினகரன் ஆதரவாளர்கள் கூறினர்.
ஏற்கெனவே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேடையில் பேசியபோது, மோடியே எங்கள் பக்கம் இருக்காரு, அவரு நமக்கு எல்லாம் செய்வாரு என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். முன்னர், ஜெயலலிதா உயிரிழந்த போது, மருத்துவமனையின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் சில நிமிடங்கள் முன்னே, மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்திருந்தார்.
அதுபோல், இதுவும் மோடிக்குத் தெரிந்திருக்கும், அவர் உடனே முதல்வர் எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்து போனில் சொல்லியிருப்பார் என்றெல்லாம் பலரும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பி விட்டனர். ஆனால், முதல்வர் அப்படி மோடியின் பெயரையெல்லாம் சொல்லாததால், ‘நல்லவேள... மோடி போன் செய்து வாழ்த்து தெரிவிக்காம இருந்தாரே...’ என்று பெருமூச்சு விடுகின்றனர் வலைத்தளவாசிகள்.