இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.. திமுகவின் 50 நாள் பொய் கணக்கை சுக்கு நூறாக உடைத்த எடப்பாடியார்.!

By vinoth kumarFirst Published Jul 6, 2021, 4:16 PM IST
Highlights

முடிவடையும் நிலையிலுள்ள ஒரு திட்டத்தை இந்த ஒன்றரை மாதத்தில் கொண்டு வந்தது போல அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சொல்வது வியப்பாக உள்ளது. அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை தாங்கள் ஆட்சிக்கு வந்த 50 நாட்களுக்குள் கொண்டு வந்ததுபோல் பேசுவது ஏற்புடையதல்ல.

பணிகள் முடிவடைய உள்ள திட்டத்தை தாம் கொண்டு வந்ததுபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுவது வியப்பாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அதிமுக ஆட்சிக் காலத்தில் "விஷன் 2023' என்ற தொழிற் கொள்கை அறிவிக்கப்பட்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொழில் வளர்ச்சிக்காக போடப்பட்டன. முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2015-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2019-ல் அதிமுக அரசும் நடத்தி பல்லாயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இதனால், பல்லாயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.

*  உலக முதலீட்டாளர் மாநாடு 2015-ல் பல்வேறு துறைகள் சார்பாக கையொப்பமிட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

*  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் கையெழுத்திடப்பட்ட 10,073 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

*  இதன் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீடு 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாயாகும். இதன் மூலம் 4.70 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

இவற்றில் கடந்த 5 ஆண்டுகளில், 72 சதவிகித திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், 73,711 கோடி ரூபாய் முதலீடுகளும், 1.86 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

*  2019-ல் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீட்டில் 10.50 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் கையெழுத்திடப்பட்டன.

*  இவற்றில் 24,492 கோடி ரூபாய் முதலீட்டில் 1,10,844 நபர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி அளித்துள்ள 81 திட்டங்கள் அதாவது, 27 சதவீத திட்டங்கள் ஒரே ஆண்டில் தமது வணிக உற்பத்தியைத் துவங்கி சாதனை படைத்துள்ளன. மேலும் 2.20 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 5.33 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி அளித்துள்ள 191 திட்டங்கள் பல்வேறு நிலையில் முன்னேற்றத்தில் உள்ளன.

*  வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் 41 நிறுவனங்களில், 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை, தமிழ் நாட்டுக்கு ஈர்த்து, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

*  தமிழ் நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கவும், “யாதும் ஊரே” என்ற புதிய திட்டத்தை கடந்த சட்டப் பேரவையில் நான் அறிவித்து, நேரடியாகச் சென்று அமெரிக்காவில் துவக்கி வைத்தேன். இது தவிர, கொரோனா ஊரடங்கு காலத்தில் 2020-ல் மே மாதம் முதலே தொழில் துறையின் வளர்ச்சிக்காக தொழில் துறைச் செயலாளர் தலைமையில் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு தொழில் முனைவோரை அழைத்து நானே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினேன். இதன் பயனாக, 2020-21 நடப்பு ஆண்டில் மட்டும் 60.674 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 1,00,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

*  மேலும், DLF நிறுவனத்தின் 5,000 கோடி ரூபாய் முதலீட்டிலான தகவல் தொழில்நுட்பப் பூங்கா திட்டம்; 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் அசன்டாஸ் ரேடியல் ஐ.டி. பார்க் திட்டம்; 250 கோடி ரூபாய் முதலீட்டில் பட்டாபிராம் டைடல் பார்க் திட்டம்; 250 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூர் வானூர்தி பூங்காவில் நவீன AEROHUB திட்டம் என பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

*  எனது (முதலமைச்சர்) தலைமையிலான உயர்நிலைக் குழு, 39,941 கோடி ரூபாய் முதலீட்டிலான 62 பெரும் தொழில் திட்டங்களை ஆய்வு செய்து உடனுக்குடன் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

*  முதலீடுகளை ஈர்க்கும் வழிகாட்டி நிறுவனம் பெருமளவில் வலுப்படுத்தப்பட்டு, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா, கொரியா குடியரசு, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள். இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் போன்ற முக்கிய நாடுகளுக்கான பிரத்யேக அமைவுகள் (Country Specific Desks) அமைக்கப்பட்டுள்ளது.

*  மும்பையைச் சேர்ந்த “Projects Today" நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-ஆம் ஆண்டு கோவிட் - 19 காலக்கட்டத்தில், முதலீடுகளை ஈர்ப்பதில், அகில இந்திய அளவில் தமிழ் நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதியாகியுள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. முடிவடையும் நிலையிலுள்ள ஒரு திட்டத்தை இந்த ஒன்றரை மாதத்தில் கொண்டு வந்தது போல அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சொல்வது வியப்பாக உள்ளது. அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை தாங்கள் ஆட்சிக்கு வந்த 50 நாட்களுக்குள் கொண்டு வந்ததுபோல் பேசுவது ஏற்புடையதல்ல. தொழில்துறையில் நாங்கள் ஏற்படுத்திய அடித்தளத்தை செம்மையாக பயன்படுத்தி,தமிழ்நாட்டை தொழில்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து செயலாற்றுங்கள் என இந்த ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

click me!