ஓ.பி.ரவீந்திரநாத்துக்கும் மத்திய அமைச்சர் பதவியா..? மோடி தீவிர ஆலோசனை... நாளை மறுநாள் அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jul 6, 2021, 3:36 PM IST
Highlights

யார்-யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் எனத்தெரிகிறது. 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 13-ம்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடி திட்டம். 

யார்-யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்பது பற்றி கடந்த 2 நாட்களாக மூத்த தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். அதில் யார்-யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் எனத்தெரிகிறது. 

காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு பதவி வழங்கப்படும் எனத்தெரிகிறது. அதேபோல அசாம் முன்னாள் முதல்-அமைச்சர் சர்பானந்த் சோனாவால், பீகார் மாநில மூத்த தலைவர் சுஷீல்மோடி ஆகியோரும் அமைச்சரவையில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. 

கூட்டணி கட்சிகள் சிலவற்றுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட இருப்பதாகவும்  லோக்ஜனசக்தியின் புதிய தலைவராகி உள்ள பசுபதி குமார் பராஸ், அப்னா தளத்தை சேர்ந்த அணுபிரியா படேல் ஆகியோரும் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.

 

அதிமுக சார்பில் வென்ற ஒரே எம்.பி ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என ஆரம்பம் முதல் கூறப்பட்டது. ஆனால் இப்போதைய சூழலில் அவருக்கு வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் 81 பேர் இடம் பெறலாம். தற்போது 53-மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதன்படி பார்த்தால் இன்னும் 28 பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம். 

click me!