
தமிழக துணை முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் தமிழகத்தை வாரிசுருட்டி தன் குடும்ப வாயில் போட்டுக்கொள்ளும் ’அதர்ம யுத்தம்’ நடத்துகிறார்! என்று கிளம்பியிருக்கும் விமர்சனம் அரசியல் அரங்கத்தை புரட்டியெடுக்கிறது.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலா டீமினால் பெரும் பிரச்னைகளுக்கு ஆளான ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ‘தர்மயுத்தம்’ எனும் பெயரில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்கும் போராட்டத்தை துவக்கினார். இதனால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, கணிசமான நிர்வாகிகள் அவர் பக்கம் சாய்ந்தனர். மேலும் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்து ஆட்சியை கலைக்க முயன்று தோற்றார்.
அதன் பிறகு சில பஞ்சாயத்துக்களின் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார், ஆட்சியில் துணை முதல்வர் பதவி உள்ளிட்ட சில பதவிகளை பெற்றார். அந்த வகையில் வீட்டு வசதி வாரியத்துறையும் பன்னீரின் கைகளில்தான் இருக்கிறது.
இப்போது பன்னீரை நோக்கி பகீர் பஞ்சாயத்து வெடித்திருப்பது இந்த விஷயத்தை மையமாக வைத்துத்தான். அதன் சாராம்சங்கள் இதோ ஹைலைட் பாயிண்டுகளாக உங்கள் பார்வைக்கு...
* தமிழகம் முழுவதும் விளைநிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக சொல்லி, அதை தடுக்க வேண்டுமென்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு போட்டார்.
* அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பெஞ்ச் ‘அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்ய கூடாது’ என்று பத்திரப் பதிவு துறைக்கு ஒரு தடை விதித்தது.
* வெகு காலமாக இழுத்திட்டிருந்த இந்த வழக்கில் தமிழக அரசாங்கம் ஒரு அரசாணையை தாக்கல் செய்ததன் மூலம் வழக்கின் பிடி தளர்ந்தது. அதாவது 2006 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்னாடி லே-அவுட் போடப்பட்ட அங்கீகாரமற்ற மனைகளை எல்லாம் வரன்முறை கட்டணம் செலுத்தி அங்கீகாரம் பெற்றுக் கொள்ளலாம்...என்பது தான் அது.
* இந்த அரசாணையை தொடர்ந்து சிறிதும், பெரிதுமாய் அங்கீகாரமற்ற தங்களின் நிலங்களை விற்க போட்டோ போட்டி நடக்கிறது தமிழகத்தில்.
* இதை வரன்முறை செய்து அரசாங்கம் சொல்லியிருக்கும் கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு அங்கீகாரம் தருவதற்கென்று அரசுத்துறை இருக்கிறது. ஆனால் நடவடிக்கை அப்படி நேர்மையாக நடப்பதில்லை
* பன்னீர்செல்வத்தின் கையில் இந்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வருகிறது.
* ஒவ்வொரு மாவட்டத்தின் தலைமை ஊரிலும் பெரிய பெரிய லாட்ஜில் ரூம் போட்டு சிலர் தங்கியிருக்கிறார்கள். தன் நிலத்தை வரன்முறை செய்ய வேண்டியவர்கள் முதலில் இந்த நபர்களை பார்த்து, பெரிய அளவில் தட்சணையை செலுத்தினால் மட்டுமே அவர்களின் ஃபைல் அரசு துறையின் டேபிளுக்கு செல்கிறது. அந்த நபர்களை கவனிக்கவில்லை என்றால் அரசுத்துறையும் மறுத்துவிடுகிறது.
* தட்சணை என்றால் சாதாரண அளவில் இல்லை. மூன்று லட்சம் சதுர அடி நிலத்துக்கு ஒன்பது லட்சம் வசூல் செய்கிறார்களாம்.
* இப்படி வசூல் செய்யும் தலைமை ஏஜெண்டுகள் யார்? என்று பார்த்தால் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் பாபு எனும் இரு நபர்கள்தான் என்று தகவல். இந்த பாபு பன்னீர் தரப்பின் நெருங்கிய சொந்தக்காரர் என்கிறார்கள். இவர்கள் நியமித்த நபர்கள்தான் தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் அமர்ந்தபடி வசூலில் பட்டையை கிளப்புகிறார்களாம்.
* பன்னீர் மகனின் இந்த பரபர சம்பாத்தியத்தால் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். ‘எல்லாத்தையும் இவரே சம்பாதிச்சுட்டா, நாங்க என்ன பண்றது?’ என்பது அவர்களின் கேள்வியாக இருக்கிறதாம். முதல்வர் தரப்பில் இதை முறையிட்டபோது, ‘இதுதான் தர்மயுத்தமான்னு பன்னீர்செல்வத்தை நீங்களே கேளுங்க!’ என்று நக்கலாக பதில் வந்ததாம்.
* தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மட்டும் சுமார் மூன்று கோடி சதுர அடி அங்கீகாரம் இல்லாத நிலம் இப்படி தட்சணை கொடுக்கப்பட்ட வகையில் அங்கீகாரம் செய்யப்பட்டிருக்கிறதா தகவலாம்.
* அப்படி பார்த்தால் தமிழகமெங்கும் சுமார் மூவாயிரம் கோடியை வசூல் பண்ணிடுச்சு பன்னீர் தரப்பு! என்று தகவல் வந்து விழுந்திருக்கிறதாம் மத்திய உளவுத்துறைக்கு. இந்த ரிப்போர்ட் அப்படியே பிரதமரின் கவனத்துக்கும் போய்விட்டதா உறுதியான தகவல்.
* ஆனால் மேற்படி செய்திகளை துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தரப்பு அழுத்தமா மறுக்கிறாங்களாம். ‘அரசியல் காழ்ப்புணர்ச்சியில் ஆதாரமற்ற வதந்திகளை எதிர்கட்சிகளும், எங்களை பிடிக்காத நபர்களும் இட்டுக்கட்டி வெளியிடுறாங்க. இப்படியெல்லாம் கொள்ளையடிக்கும் புத்தி பன்னீர் அய்யாவுக்கு என்றுமே கிடையாது. அந்த புத்தி இருந்திருந்தால் அம்மா அவரை இத்தனை முறை முதல்வராக்கி இருப்பாரா? இன்னும் எத்தனை வதந்தி குற்றச்சாட்டுகளை துணை முதல்வர் அனுபவிக்க வேண்டுமோ தெரியவில்லை. ’ என்று வேதனையுடன் சொல்கிறார்கள்.