
தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டுக்கு மேலாக நீடித்து வந்த காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் திறந்துவிட வேண்டும் என்ற நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரி வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. தமிழகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 10 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என தீர்ப்பளித்தது.
நடுவர் மன்றம் 192 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், அதில் 14.75 டிஎம்சி நீரை உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது. அந்த நீரை கர்நாடகாவிற்கு வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டதற்கு விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வருத்தம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தினகரன், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். தமிழகத்திற்கான பங்கு குறைக்கப்பட்ட நிலையில், அதையாவது கர்நாடகா அரசு உடனடியாக வழங்கி டெல்டா மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களை காக்க வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.