
அ.தி.மு.க.வில் உட்கட்சி களேபரம் வெடித்து சசி- தினகரன் எனும் அணி உருவானதும் அவர்கள் பக்கம் வந்து நின்றவர்களில் முக்கியமானவர்கள் வெற்றிவேல், பெங்களூரு புகழேந்தி, தங்கதமிழ்செல்வன், நாஞ்சில் சம்பத், செந்தில்பாலாஜி போன்றோர்.
இதில் வெற்றிவேலின் செயல்பாடுகள் அதிரடியாய் தினகரனுக்கு பலத்தை அள்ளிக் கொடுக்கின்றன. ஆனால் புகழேந்தியும், நாஞ்சிலும் அவரது அணியின் பிரச்சார பில்லர்களாக இருக்கின்றனர். சும்மாவே எடப்பாடி - பன்னீரை வறுத்து வகுந்தெடுக்கும் நாஞ்சில் சம்பத் தங்களின் தலைவன் தினகரன் எம்.எல்.ஏ.வான பிறகு சும்மாவிடுவாரா?...போட்டுப் பொளந்திருக்கிறார் எதிரணியை இப்படி...
“தினகரன் ஒரு மாயமான் தான். ராமாயணத்தில் ராவணன் தான் மாயமானாக வந்தான். அவன் தான் தென் திசைவேந்தன். தமிழர்களின் மான உணர்ச்சியின் அடையாளம். ஆகவே இன்று இளைஞர்களின் எழுச்சி நாயகனாக இருக்கும் தினகரனை ‘மாயமான்’ என எதிரணியினர் சொன்னது பொருத்தம்தான். நன்றியுணர்ச்சியும், மனசாட்சியும் இல்லாத ஓ.பி.எஸ். எனும் தேநீர்கடை வியாபாரியை, அம்மாவுக்கு அறிமுகம் செய்து, அவர் உயர்ந்த இடத்தில் உட்காருவதற்கு ஏணியாக இருந்தவர் டி.டி.வி.தினகரன்.
இரட்டை இலை சின்னத்தை முடக்கியதும், கட்சியின் அங்கீகாரத்தை கேள்விக்குறியாக்கியதும், அசாதாரண சூழலில் இன்று தமிழகம் இருப்பதற்கு அடித்தளம் அமைத்தததும் பன்னீர்செல்வம்தான். தமிழினத்தையே காட்டிக் கொடுத்தவர்தான் இந்த 420 ஓ.பி.எஸ்.
ஜோஸியர்கள் சொல்வதெல்லாம் நடந்துவிடுவதில்லை. ஆனால் தமிழக அரசியலில் தினகரன் சொன்னது நடக்கும். அவர் ஒரு அரசியல் தீர்க்கதரிசி. ‘ஆர்.கே.நகரில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் நிற்பேன், ஜெயிப்பேன்.’ என்றார் அன்றே. நின்றார், வென்றார்.
இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் கட்சி, தமிழகத்தை ஆளும் கட்சி, தமிழகத்தை ஆளும் கனவில் மிதந்த கட்சி இந்த மூன்றும் குக்கரில் வெந்து தணிந்துவிட்டன.
என்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிவிட்டதாக பிதற்றுகிறார்கள். நான் தான அவர்கள் பக்கமே இல்லையே! பின் எப்படி என்னை நிக்க முடியும்? நான் டி.டி.வி.யின் பக்கமிருக்கிறேன். அதுதான் உண்மையான அ.தி.மு.க. என்பதை ஆர்.கே.நகர் நிரூபணம் செய்திருக்கிறது.
தினகரன் பக்கம் சாய்பவர்களை ‘கட்சியை விட்டு நீக்குவோம்’ எனும் கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள் பழனிசாமியும், பன்னீர்செல்வமும். இதே கத்தி அவர்களுடைய கழுத்திற்கும் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.” என்று சீறி முடித்திருக்கிறார்.