
ரஜினி சில மாதங்களுக்கு முன் அரசியலுக்கு வருவது போல் சில ஜில்ஜாக் வேலைகளை காட்டியதும், அவரை ஆஹா ஓஹோ!வென புகழ்ந்ததோடு மட்டுமில்லாமல், ஸ்டாலினை அவரோடு ஒப்பிட்டு ’மக்களை ஈர்க்கக்கூடிய வல்லமை அவரை விட ரஜினியிடம் தான் அதிகமிருக்கிறது.’ என்று சொல்லி பெரிய சென்சேஷனை பற்ற வைத்தார் திருமா வளவன்.
இதற்காக தி.மு.க.வின் இணையதள டீமிடம் கன்னாபின்னாவென வாங்கியும் கட்டினார்.
இந்நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் ரஜினி, தனது அரசியல் முடிவை வரும் 31-ம் தேதியன்று அறிவிக்கிறேன் என்றிருக்கிறார்.
இந்த முடிவுக்கு தமிழகமெங்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் வரவேற்பும், விமர்சன்மும் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆராதித்தாரோ அதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரான ரவிக்குமார் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ’தலித்துகளுக்கான ஆபத்து’ என்று விமர்சித்திருக்கிறார்.
இது பற்றி விரிவாக பேசும் அவர் “ ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டு தலித் மக்கள் சினிமா மாயையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் வந்துள்ளது. அவர்களை அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாற்றுவதற்கு மாறாக மீண்டும் ரசிகர்களாக்குவது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும்.
ஏழை மக்களின் காவலராக திரையில் தோண்றிய எம்.ஜி.ஆரின் ஆட்சி தமிழ்நாட்டில் அரசியல் பலம் பெறத்தான் உதவியதே தவிர தலித்துகள் பலம் பெற அல்ல. அதேப்போல் நிலை மீண்டும் தொடர வேண்டுமா? அரசியலை ஒரு சினிமா புராஜெக்டாகவே ரஜினி பார்க்கிறார். ‘படத்தை ரிலீஸ் செய்து பணம் பார்க்கணும்!’ என்பது போல ‘போருக்கு போனா ஜெயிக்கணும்!’ என்கிறார். நம்முடைய தலைவர்கள் ஜெயிப்பதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல. மக்கள் சேவைதான் பிரதானமே தவிர தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனால் மக்கள் சேவை என்பது ரஜினி பேச்சிலேயே இல்லை. இதனால்தான் ரஜினியின் அரசியல் பிரவேசம் தலித் மக்களுக்கு பேராபத்தாக முடியும் என கருதுகிறேன்.” என்றிருக்கிறார்.
தலைவர் ஒன்றை சொல்ல, பொதுச்செயலாளரோ அதற்கு நேர் எதிரானதை சொல்ல என்று விடுதலை சிறுத்தைகளுக்குள் கலகம் மூண்டுள்ளது.
திருமாவுக்கும், ரவிக்கும் இடையில் சில காலத்துக்கு முன்பேயே நெருடல் வேர்விட்டது அது இன்று வெளிப்படையாக தெரிந்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.