
பிஜேபி.,யில் இணையப் போகிறார் ஓபிஎஸ் ... புகழேந்தி கிளப்பும் பூகம்பம்!
தமிழக துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், பாஜக.,வில் இணையப் போகிறார் என்று கூறி பகீர் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளார் தினகரன் ஆதரவாளரான புகழேந்தி.
கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், தினகரன் ஆதரவாளருமான வழக்குரைஞர் புகழேந்தி நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழக அரசின் செயலற்ற தன்மை இதுதான் என்று கூறி சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நாட்டைக் கொள்ளையடிப்பதுதான் எடப்பாடி அரசின் வேலை. இதுதான் உண்மையான நிலவரம். எடப்பாடி அணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அதனால், பன்னீர்செல்வம் விரைவில் பாஜக.,வில் இணையப் போகிறார்... என்று இரு தரப்புக்கும் இடையே சிண்டு முடிந்து வைத்தார் புகழேந்தி.
மோடி இருக்கிறார் பார்த்துக் கொள்வார் என்று அமைச்சர் கூறியதை கிண்டல் செய்த புகழேந்தி, ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடிய அமைச்சர், எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் பார்த்துக் கொள்ள மோடி இருக்கிறார் என்று சொன்னால் என்ன பொருள்? இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு குறுக்கு வழியில் முயற்சிக்கிறார்களா? இவர்களுக்கு உதவுவதுதான் பிரதமர் மோடிக்கு வேலையா? அவர் நாட்டு மக்களுக்குப் பணியாற்றவில்லையா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி திக்கு முக்காட வைத்தார்.