ஓ.பன்னீர் செல்வம் தியாகி அல்ல... புத்திசாலி... மு.க.ஸ்டாலின் திடீர் பாராட்டு..!

By Thiraviaraj RMFirst Published Mar 31, 2021, 2:48 PM IST
Highlights

ஓ.பன்னீர்செல்வத்தை தியாகி என பலரும் நினைக்கின்றனர். ஆனால், அவர் பெரிய புத்திசாலி. 

தோற்கப் போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே இருக்கட்டும் என விட்டுக்கொடுத்த ஓ.பன்னீர்செல்வம் புத்திசாலி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ’’முதல்வர் பழனிசாமி தோல்வி பயத்தில் ஆத்திரத்தின் உச்சத்தில் உள்ளார். விடாக்கண்டன் பன்னீர்செல்வம், கொடாக்கண்டன் பழனிசாமி. பன்னீர்செல்வத்தை, பழனிசாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதாவது, அதிமுக.,விற்கு துரோகம் செய்தவர்கள் டெபாசிட் கூட வாங்கமாட்டார்கள் என முதல்வர் பேசியுள்ளார். அப்படியெனில் ஆட்சிக்கு எதிராக ஓட்டுப்போட்ட பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் டெபாசிட் வாங்கக்கூடாது என்றும் அர்த்தம்.

ஓ.பன்னீர்செல்வத்தை தியாகி என பலரும் நினைக்கின்றனர். ஆனால், அவர் பெரிய புத்திசாலி. தோற்கப் போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளராக பழனிசாமியே இருக்கட்டும் என புத்திசாலித்தனமாக அவர் சொல்லியுள்ளார். மூன்று முறை முதல்வராக வாய்ப்பு பெற்ற அவர் தன் தொகுதிக்கு கூட ஒன்றும் செய்யவில்லை. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் எனக்கூறிய அவர், அந்த கமிஷன் முன்பு இதுவரை ஆஜராகவில்லை. ஜெ.,விற்கே துரோகம் செய்தவர் பன்னீர்செல்வம்.

தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக பெரிய நாடகத்தை நடத்தினர். சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றினர். அப்போது அமைதியாக இருந்து கைத்தட்டி வரவேற்ற பன்னீர்செல்வம், இப்போது அது தற்காலிகமானது என்கிறார். ஆனால், பாமக நிறுவனர், இது நிரந்தரமான சட்டம் என முதல்வர் உறுதியளித்ததாக கூறியுள்ளார். மக்களை ஏமாற்றுவதற்காக இதுபோன்ற நாடகமாடுகின்றனர்.

தேர்தல் வரும்போது மட்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, பொய்யாக பேசிவிட்டு சென்றிருக்கிறார். அப்போது பிரதமரை புகழ்ந்து பேசிய பன்னீர்செல்வம், உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான் என பேசியது உலகமகா நடிப்பு. ஆனால், ஜல்லிக்கட்டிற்காக போராடிய இளைஞர்கள் தான் நாயகர்கள். பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்துவிட்டு போனால் நல்லதுதான். அவர் வந்துசென்றால் தேர்தலில் என்ன முடிவு கிடைக்கும் என அனைவருக்கும் தெரியும்’’ என அவர் கூறினார்.

click me!