அய்யோ.. கடவுளே... மருத்துவமனையில் தீ விபத்து.. உடல் கருகி, மூச்சுத் திணறி 18 பேர் உயிரிழப்பு..

By Ezhilarasan BabuFirst Published May 1, 2021, 11:24 AM IST
Highlights

இதில் 12க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களுடன் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அப்போது சிலரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றம் செய்தபோது கூடுதலாக மேலும் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

குஜராத் மாநிலம் பாரூச் நகரில் அமைந்துள்ள பட்டேல் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவால் மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வரும் நிலையில், இந்த கோரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளது. 

இந்தியாவை கொரோனா சுனாமி மிக உக்கிரமாக தாக்கிவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் போதிய தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகள் இன்றி கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கான கொடூரம் இந்தியாவில் அரங்கேறி வருகிறது. 

இந்தியாவின் அவல நிலையைக் கண்டு, சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன. முதல் அலையின் போது பல நாடுகளுக்கு உதவிய இந்தியா தற்போது உலக நாடுகளின் உதவியை கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முற்றிலும் பரிதாபத்திற்குரிய நாடாகவே தற்போது இந்தியா மாறியுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் பாரூச் நகரிலுள்ள பட்டேல் மருத்துவமனையில் கோரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது  நான்கு மாடிக் கட்டிடமான பட்டேல் மருத்துவமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். வெளியூர் மற்றும் உள்ளூர் வாசிகள் அதில் இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை மையத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது, மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து புகை மூட்டம் கிளம்பியதை அடுத்து மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அங்குமிங்கும் ஓட தொடங்கினர்.

இதில் 12க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களுடன் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அப்போது நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது, மேலும் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.ஆனாலும் இதில் தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டதை அடுத்து மீதம் உள்ள நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.இது குறித்து தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரிகள், இன்று காலை 6:30 மணி அளவில் இறப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளனர். பாரூச் மருத்துவமனை, தலைநகர் அகமதாபாத்தில் இருந்து பாரூச் ஜம்ஷெட்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 190 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் ஏற்பட்ட உயிரிழப்பு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

 

click me!