தமிழகத்தின் மூன்றாவது பேரியக்கம்... கம்பீரமாக எழுந்து நிற்கிறது நாம் தமிழர்... சீமான் பெருமிதம்..!

By Asianet TamilFirst Published May 4, 2021, 9:37 PM IST
Highlights

நாம் தமிழர் கட்சி தமிழகத்தின் மூன்றாவது மாபெரும் அரசியல் பேரியக்கமாகக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 76 தொகுதிகளில் வென்றது. இந்த இரு கூட்டணிகளைத் தவிர்த்து பிற கட்சிகள் எதுவும் தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஆனால், 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 178 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பெற்றது. மேலும் கணிசமாக 6.85 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 1.1 சதவீத வாக்குகளை பெற்ற அக்கட்சி இந்தத் தேர்தல்ல் 5 மடங்கு வாக்குகளை அதிகம் பெற்றது. இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 30 லட்சத்திற்கும் மேலான மக்களின் வாக்குகளைப் பெற்று தமிழர் நிலத்தின் தனித்துவமான மாபெரும் அரசியல் அமைப்பாக மாறியிருப்பது வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த செய்தியாகும். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிட்டு 4,58,104 வாக்குகளைப் பெற்று 1.1 வாக்கு விழுக்காடு அடைந்தது. கடந்த 2019 நாடாளுமன்றத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 16,45,185 வாக்குகளைப் பெற்று ஏறத்தாழ 4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.
நடந்து முடிந்துள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 30,41,974 வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது மாபெரும் அரசியல் பேரியக்கமாகக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. பொய்ப்புளுகுகளால், வசன அடுக்குகளால் புரையோடிப்போன தமிழக அரசியல் பரப்பை, கொள்கை சமரசமின்றி உயிர்ப்போடு போராடிய போராட்டங்களால் அதிர வைத்தோம். சாதி-மத உணர்ச்சியைச் சாகடித்து 'நாம் தமிழர்' என்ற உணர்வோடு ஊருக்கு ஊர் திரண்ட இளைஞர் கூட்டம், இந்த மண்ணிற்காகத் தூய அரசியலை கட்டியெழுப்பியபோது அதனைத் தகர்க்க, கடும் உழைப்பினால் விளைந்த எங்களது முயற்சிகளை முறியடிக்க எங்களைக் குறித்துத் தொடர்ச்சியான பல பொய்யான பரப்புரைகள் நடைபெற்றன.
அரசியல் கட்சியாக மட்டுமில்லாமல், சுற்றுச்சூழல் பாசறை, கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை போன்ற பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மாற்று அரசியலுக்கான பல முயற்சிகளை முன்னெடுத்தோம். தமிழர் பண்பாட்டு மீட்சி அரசியலுக்காக வீரத்தமிழர் முன்னணி தொடங்கித் தஞ்சை பெருவுடையார் கோயிலின் உச்சியில் தமிழை முழங்க வைத்தோம். 2021 சட்டமன்றத்தேர்தலில் 50 விழுக்காடு பெண்களுக்கான இடம், பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம், இசுலாமியச் சொந்தங்களுக்கு மற்ற கட்சிகளைவிட அதிக வாய்ப்பு, சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கின்ற பல எளிய சமூகங்களுக்குத் தேர்தலில் வேட்பாளராக நிற்கின்ற சம உரிமை என மற்ற எந்தக் கட்சியும் செய்யத் துணியாத புரட்சிகரச் செயல்களை நாம் தமிழர் கட்சி துணிந்து செய்தது.
கூட்டணி இல்லாமல், தனித்துவமானக் கொள்கைகளை முன்வைத்து, படித்த இளைஞர்கள், எளியப் பெண்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி இத்தேர்தலை மிக எழுச்சிகரமாகச் சந்தித்தபோது கிடைத்த ஆதரவு, மக்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற புத்தெழுச்சியை வழங்கியது. கோடி கோடியாய்க் கொட்டப்பட்ட பணமூட்டைகளுக்கு மத்தியில் எளிய மக்களின் பிள்ளைகளான நாங்கள் பெற்றிருக்கின்ற 30 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் என்பது ஜனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளத்தக்க வாக்குகள் மட்டுமல்ல; வரலாற்றின் போக்கில் அடிமைப்படுத்தப்பட்டு வீழ்த்தப்பட்ட தமிழ்த்தேசிய இனம் மீண்டெழும் என நம்புகிற ஒவ்வொரு தமிழரும் பெற்றிருக்கின்ற நம்பிக்கைத்துளிகள்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளித்துள்ள வாக்குகள் மூலம் விளையும் உந்துதலைக் கொண்டு, மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு உள்ள வேட்கையோடு பேரெழுச்சியாக நாம் தமிழர் கட்சி பணியாற்றும். மக்கள் மன்றங்களில் வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக மக்கள் மனங்களில் நிலைபெறும்” என்று அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார். 
 

click me!