என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதி ஒப்பந்தம் கையெழுத்து.. அதிருப்தியில் அதிமுக... முதல்வர் வேட்பாளர் யார்?

By vinoth kumarFirst Published Mar 9, 2021, 4:02 PM IST
Highlights

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கூட்டணி உறுதியானது. இதில், என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜக - அதிமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கூட்டணி உறுதியானது. இதில், என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜக - அதிமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெறுமா? அல்லது தனித்து போட்டியிடலாமா? என்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பேசினார். அதைத் தொடர்ந்து, நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, கூட்டணியை ரங்கசாமி உறுதி செய்தார். 

இதனையடுத்து,  என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கட்சிகள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக, அதிமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், தொகுதிகள் ஒதுக்கீடு விரைவில் செய்யப்படும். 3 கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கும். பாமக இதில் இடம்பெறவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் எம்எல்ஏக்கள் முதல்வரைத் தேர்வு செய்வார்கள் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தொகுதிகள் எத்தனை என்பது தொடர்பாக ஒதுக்கீடு செய்யப்படாததால், அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

click me!