மு.க.ஸ்டாலினை இயக்குவதே நாங்கதான்... அடித்துச் சொல்லும் ஆர்.பி.உதயகுமார்..!

By Thiraviaraj RMFirst Published Nov 26, 2020, 2:33 PM IST
Highlights

புயல் பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு செய்வதை பார்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். எதிர்க்கட்சி தலைவரை நாங்கள் தான் இயக்கி வருகிறோம். 

எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை இயங்க வைப்பதே நாங்கள்தான் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுபாட்டு அறையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிவர் புயலால் ஏற்ப்பட்டுள்ள பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ’’தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்ததால் மிக பெரிய பாதிப்பு ஏற்படாமல் தற்போது தவிர்க்கப்பட்டு உள்ளது. இந்தப் புயலை பொறுத்தவரை தற்போது வரை எந்த ஒரு மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக 3 உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 3085 சிறப்பு முகாமில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 317 நபர்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவர் புயல் காரணமாக 101 வீடுகள் சேதமடைந்துள்ளது 26 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

தமிழகத்தில் சேதமடைந்த பயிர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவட்ட வாரியாக பணிகள் துவங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு எடுத்து முடித்த பின்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார். தற்போது புயலால் பாதிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறை சார்பாக புயல் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் உள்ள இயந்திரங்களை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் பணி ஏற்கனவே துவங்கி விட்டது.

சென்னையில் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது என்பதை நாங்களே கூறி உள்ளோம். இவ்வளவு பெரிய புயல் பாதிப்பு நேரத்தில் மழை நீர் செல்ல முடியாமல் இருக்கும் இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. அதனை உடனடியாக நீக்குவதற்காக தொடர்ந்து மாநகராட்சி சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியிடுவதால் மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், முதல்வர் நேரடியாக களத்திற்கு சென்றதால் மக்கள் அச்சத்தில் இருந்து மீண்டனர். புயல் நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு பாதிப்பு இல்லாமல் இந்த புயலில் இருந்து காப்பாற்றியதற்கு  மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். புயல் பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு செய்வதை பார்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். எதிர்க்கட்சி தலைவரை நாங்கள் தான் இயக்கி வருகிறோம். எங்கள் இயக்கத்தை பார்த்துதான் அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார்’’ என அவர் தெரிவித்தார்.

click me!