இனி எல்லாம் சின்னம்மா தான்..! பொறுமை காக்கும் டிடிவி..! பெங்களூருவில் நடந்தது என்ன?

By Selva KathirFirst Published Jan 28, 2021, 11:44 AM IST
Highlights

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்க உள்ளார். கிருஷ்ணபிரியா – டிடிவி இடையே பிரச்சனை உள்ளது. எனவே அடிக்கடி அங்கு சென்று சசிகலாவை தினகரன் சந்திப்பதில் சிக்கல் உள்ளது. 

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை வாசலில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து மிகவும் நிதானமாக பேசியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி சரவெடியாக பேசக்கூடியவர் டிடிவி தினகரன். கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் நேரடியாக பதில் அளித்து செய்தியாளர்களை அசர வைக்க கூடியவர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்ட அனைத்தையும் தவிர்த்து அமைதி காத்து வந்தார். சசிகலா விடுதலைக்கு பிறகு தினகரன் மீண்டும் அரசியலில் தீவிரம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா விடுதலை ஆன தினத்தன்று தினகரன் வழக்கத்தை விட மிகவும் அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதற்கு காரணம் சசிகலா தான் என்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அரசியல் ரீதியாக எதுவும் பேச வேண்டாம் என்று தினகரனிடம் சசிகலா கூறிவிட்டதாக சொல்கிறார்கள். அத்தோடு சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தினகரனை அழைத்து சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக வெளிப்படையாக எதுவும் பேசக்கூடாது என்று சசிகலா உத்தரவிட்டதாக கூறுகிறார்கள். இதனால் தான் கடந்த சில மாதங்களாகவே தேர்தல், கூட்டணி தொடர்பாக எல்லாம் எதையும் தினகரன் வெளிப்படையாக பேசவில்லை.

அதே சமயம் திரை மறைவில் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி, போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து தினகரன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இது தொடர்பாக சசிகலாவிடமும் தினகரன் பேசியதாக சொல்கிறார்கள். ஆனால் சசிகலா தினகரனின் தேர்தல் வியூகத்தை விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் அதைப்பார்த்துக் கொள்வதாகவும் அது வரை அமைதி காக்குமாறும் தினகரனை சசிகலா வலியுறுத்தியுள்ளார். இதனிடையே விடுதலை ஆன பிறகு பெங்களூர் மருத்துவமனையில் சசிகலா தினகரனை அழைத்து பேசியுள்ளார்.

அப்போது அமமுக, அதிமுக என எதைப்பற்றியும் வெளிப்படையாக பேசக்கூடாது என்று மறுபடியும் சசிகலா உத்தரவிட்டதாக கூறுகிறார்கள். இதனால் தான் செய்தியாளர் சந்திப்பின் போது எடப்பாடி, ஓபிஎஸ், ஜெயலலிதா நினைவிடம் திறப்பு குறித்தெல்லாம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியும் தினகரன் பொறுமையாகவும், நிதானமாகவும் பதில் அளித்ததாக கூறுகிறார்கள். அதே சமயம் இனி அமமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி சசிகலா தான் முடிவெடுப்பார் என்று தினகரன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்க உள்ளார். கிருஷ்ணபிரியா – டிடிவி இடையே பிரச்சனை உள்ளது. எனவே அடிக்கடி அங்கு சென்று சசிகலாவை தினகரன் சந்திப்பதில் சிக்கல் உள்ளது. அத்தோடு சென்னையில் அமமுகவிற்கு என்று புதிதாக ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அங்கும் சசிகலா வருவாரா என்கிற சந்தேகம் டிடிவிக்கு உள்ளது. எனவே பெங்களூரில் சசிகலா இருக்கும் போதே தனது அரசியல் எதிர்காலம் குறித்து தினகரன் பேசி முடிக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

ஆனால் சசிகலாவை பொறுத்தவரை தற்போதைக்கு கொரோனா தனிமைப்படுத்துதல் காலம் முடிய வேண்டும் என்று காத்திருப்பதாக சொல்கிறார்கள். அதன் பிறகு சென்னை வரும் போது மிக பிரமாண்டமாக தனக்கு வரவேற்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறுகிறார்கள். எனவே அந்த வேலையை தற்போது கவனிக்குமாறு தினகரனுக்கு மட்டும் அல்லாமல் தனக்கு நெருக்கமான வேறு சில கட்சி பிரமுகர்களையும் சசிகலா கேட்டுக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

click me!