ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி ஜெயலலிதா வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumarFirst Published Jan 28, 2021, 11:24 AM IST
Highlights

சென்னை போயஸ்கார்டனில்  அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

சென்னை போயஸ்கார்டனில்  அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

தமிழக அரசியலில், ஆளுமை மிக்க தலைவராக வலம் வந்தவர் ஜெயலலிதா. அதிமுக பொதுச் செயலராகவும், நான்கு முறை முதல்வராகவும் இருந்து, பல சாதனைகள் படைத்தவர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், 2016 டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ம் தேதி அறிவித்தார்.

இதையடுத்து போயஸ் கார்டன் வீட்டை அரசு கையகப்படுத்தியது. அதனை நினைவு இல்லமாக ஆக்குவதற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் ரூ.68 கோடி செலுத்தப்பட்டு ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் போயஸ் கார்டன் இல்லத்தில் 3 கட்டமாக ஆய்வு மேற்கொண்டனர்.  ஜெயலலிதா இல்லத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்பது குறித்து ஆராய்ந்து இந்த குழுவினர் அரசுக்கு பரிந்துரைத்தனர்.

இந்த பரிந்துரைபடி ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. வீடு முழுவதும் வர்ணம் அடிக்கப்பட்டு என்னென்ன பொருட்களை எங்கெங்கு வைக்கலாம் என்று பட்டியலிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது. 10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ள இந்த இல்லத்தில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும். 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளிப்பொருட்களும், வெள்ளி பாத்திரங்களும் இடம் பெற்றுள்ளன.

மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையை பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவு பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் இங்கு காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பொருளும் கண்ணாடி பேனல்களுக்குள் காட்சிப்படுத்தப்படவில்லை. நேரடியாக பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த அரசுடைமை ஆக்கப்பட்டுள்ள போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ இல்லத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். வீட்டின் உள்ளே இருந்த குத்து விளக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஏற்றி வைத்தனர். 

click me!