
பண மதிப்பிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்ட நவம்பர் 8 ஆம் தேதியை கறுப்பு தினமாக கடைப்பிடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் , அதே நாளை கருப்புப்பண ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு 8 மணியளவில் புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக பணமதிப்பிழப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பொது மக்கள், வியாபாரிகள் என அனைவரையும் மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கிய இந்த நடவடிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடக்கத்தில் கள்ள நோட்டு ஒழிப்பு, கறுப்புப்பண ஒழிப்பு என நாட்டின் நன்மைக்கே என மக்கள் கருத்தினாலும், தொடர்ந்து இதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்ததற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை முக்கிய காரணம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.. இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு அடுத்தமாதம் 8-ம் தேதியுடன் ஒராண்டுகள் நிறைவடைகிறது.
இந்த நாளை கறுப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், தி.மு.க, திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18 கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நாளில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அறிவிப்பை அடுத்து அதே நாளை கருப்புப்பண ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி இன்று தெரிவித்துள்ளார்.