
சேலம்
சிலிப்பர் செல்களைக் கொண்டு விரைவில் கிளைமாக்சை அரங்கேற்றும்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்க மாட்டார் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்செல்வன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதிமுக அம்மா அணியில் இருப்பவரும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், எம்.எல்.ஏ. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டவருமான தங்கத்தமிழ்செல்வன் நேற்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ். அணிக்கு கிடைக்கக் கூடாது என்று நாங்கள் யாரும் தடுக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அணி என இரண்டாக பிரிந்தது.
நாங்கள் அதிமுக அம்மா அணியில் இருக்கிறோம். பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் உள்ளனர். டி.டி.வி.தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்தவர்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் போட்டு, 1118 பேர் அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். அதில் 116 பேரின் அபிடவிட் போலியானவை. எனவே, அதை முதலில் விசாரிக்க தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தோம். அதன் பின்னரே இரட்டை இலை சின்னம் பற்றி முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளோம்.
இரட்டை இலை தொடர்பான விசாரணை வருகிற 30–ஆம் தேதி வருகிறது. அன்றைக்கு முடிவு வந்தாலும் சரி, அதன் பின்னர் வேறு தேதியில் முடிவு வந்தாலும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். இதில் நியாயமான தீர்ப்பு இல்லை என்றால், உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆட்சியில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என 25 பேர் எங்களுக்கு ‘சிலிப்பர் செல்‘லாக இன்னும் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை கொண்டு விரைவில் கிளைமாக்சை அரங்கேற்றுவோம். அப்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கமாட்டார்.
தற்போது முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. போட்டி பொறாமையால் அவர்களிடையே பிரச்சனை இருந்து வருகிறது. அங்கு ஒற்றுமை இல்லை. எனவே, இந்த ஆட்சியையும், கட்சியையும் கட்டுக்கோப்பாக கொண்டு செல்லும் திறமை டி.டி.வி.தினகரனுக்கு மட்டுமே உள்ளது. மக்களையும், தொண்டர்களையும் மாற்றி, மாற்றி குழப்பி வரும் இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்” என்று அவர் தெரிவித்தார்.