
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி எம்எல்ஏ சண்முகத்தை காணவில்லை என்று அப்பகுதி மக்கள் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கிணத்துக்கடவு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சண்முகம். இவரை கடந்னத சில நாட்களாக காணவில்லை எனக்கூறி அந்த தொகுதி மக்கள் ஒன்று சேர்ந்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டரில், எங்கே போனார் எம்.எல்.ஏ.? ஊரெல்லாம் டெங்கு... உயிரை பறிக்குது... சதுரடி வாரியாக குடிநீருக்கு வரி... கூடுதல் டெபாசிட்... குப்பைக்கு வரி விதிப்பு... புதிய வரி சீராய்வு... மக்களுக்காக மாநகராட்சியா? மக்களை வாட்டும் மாநகராட்சியா...? கேட்பதற்கு நாதியில்லை... கேட்க வேண்டிய தொகுதி எம்.எல்.ஏ. எட்டிமடை சண்முகத்தை காணவில்லை... எம்.எல்.ஏ.வை தேடி கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் - இப்படிக்கு, கிணத்துக்கடவு தொகுதி மக்கள், என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வால் போஸ்டர் கருப்பு-வெள்ளையில் அச்சடிக்கப்பட்டுள்ளது. சுந்தராபுரம், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால்மண்டபம், கிணத்துக்கடவு, குறிச்சி, போத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் தட்டிப்போர்டும் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அதிமுக தொண்டர்கள் சிலர் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டா்களை கிழித்து அப்புறப்படுத்தினர். அப்போது அவர்களிடம் தொகுதி மக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.
பொது மக்களின் எதிர்ப்பால் அச்சமடைந்த அதிமுக தொண்டர்கள் பாதி கிழித்த நிலையில் போஸ்டரை அப்படியே விட்டுவிட்டு சென்றனர்.