
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது, சசிகலா தரப்பில் ஓர் அணியும், ஓபிஎஸ் தரப்பில் ஓர் அணியும் செயல்பட்டு வருகின்றன.
இரு தரப்பினருமே தாங்கள்தான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையத்திடம் பஞ்சாயத்து கூட்டியதில், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
அதிமுக என்ற பெயரை இரு தரப்பினருமே பயன்படத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது இங்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பணப் பட்டுவாடா, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன.
ஆனாலும், விதிகளை மீறி ஒரு சில பகுதிகளில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக புகார் வந்தது.
சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரனின் சமூக வலைத்தளத்தில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் வந்ததையடுத்து அவரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது.
இதற்கு தினகரன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனும் அதிமுக பெயரை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, அதிமுக . சின்னம் மற்றும் கொடியை தவறாக பயன்படுத்தியதாக தினகரன் மற்றும் மதுசூதனன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இன்று மாலை 4 மணிக்குள் இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.