விரைவில் அறிவிப்பு.? தமிழ்ப் புத்தாண்டை அமர்க்களப்படுத்த முடிவு... மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அமைச்சர்.!

By Asianet TamilFirst Published Dec 2, 2021, 9:09 PM IST
Highlights

 வரும் தை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதால், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கலை முன்னிட்டு கிராமங்கள் தோறும் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி 21 பொருட்கள் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்க உள்ளது. இதற்கான கைப்பை அண்மையில் வெளியானது. அதில், பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயருடன் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, கருணாநிதியின் முந்தைய ஆட்சியில் இருந்ததைப்போல தமிழ்ப் புத்தாண்டு தை முதல் தேதிக்கு மாற்றப்படுகிறதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்காத நிலையில், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதனின் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விளையாட்டு துறை செயலாளர் அபூர்வா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் ஆனந்தகுமார் உள்பட உயரதிகாரிகள் பங்கேற்றார்கள். இக்கூட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு அறிவுறுத்தல்களை வழங்கினார். பின்னர் இதுதொடர்பாக ட்விட்டரிலும் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

அதில், “தமிழர் திருநாளாம் தமிழ் புத்தாண்டு, தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு., தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கு இணங்க. கிராமங்கள் தோறும் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து நடைபெற்ற விளையாட்டுத்துறை அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது.” என்று படத்தை அமைச்சர் பகிர்ந்துள்ளார். இதன்படி பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் 12,500 கிராமங்களில் கபடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பாரம்பரியப் போட்டிகள் நடைபெற உள்ளன.

தமிழ்ப் புத்தாண்டு முதல் தேதிக்கு மாற்றப்படுகிறதா என்றும், அப்படி இருந்தால் அந்த எண்ணத்தை கைவிடும்படியும் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன. இந்நிலையில் முதல்வர் உத்தரவுக்கு இணங்க என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமைச்சர் சி.வி.மெய்யநாதன். வரும் தை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதால், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இதுதொடர்பான செய்திகள் வெளியான நிலையில், அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் தமிழ்ப் புத்தாண்டு என்ற வார்த்தையைக் காணவில்லை..

click me!