அங்கே இல்லை... இங்கே இருக்கு... வேட்பாளர்களை குழப்பிய தேர்தல் அலுவலர்கள்..! ​

By Thiraviaraj RMFirst Published Mar 23, 2021, 6:34 PM IST
Highlights

விருகம்பாக்கம் தொகுதியில் தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர் அறிவிப்பில் குழப்பம் ஏற்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கியது. அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனுதாக்கல் செய்தனர்.

ஏழாயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்து வேட்பாளர்களும் அவர்களுக்கான சின்னமும் நேற்று அறிவிக்கப்பட்டது. ஏழாயிரத்து 255 மனுக்களில் இரண்டாயிரத்து 171 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவாயிரத்து 663 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. ஆனாலும், அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் மனுவில் சில பல குறைகள் இருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்கிற தேர்தல் அலுவலர்கள், சுயேட்சை வேட்பாளர்களின் மனுவில் சில குறைகள் இருப்பதாகக்கூறி தள்ளுபடி செய்து விட்டதாக புகார்கள் எழுந்தன. 

இந்நிலையில் விருகம்பாக்கம் தொகுதியில் தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர் அறிவிப்பில் குழப்பம் ஏற்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தொகுதியில் திமுக சார்பாக பிரபாகர் ராஜா, அதிமுக சார்பாக வி.என்.ரவி, சுயேட்சை வேட்பாளராக நடிகர் மயில்சாமி உள்ளிட்ட 27 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான சின்னமும் ஒதுக்கப்பட்டது.  இதனை நேறு தேர்தல் அலுவலகத்தில் வைத்து அதிகாரி அறிவித்தார். இந்நிலையில் தான் ஒரு குழப்பத்தை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த முத்துவேல் கூறுகையில், ‘’எனது படிவங்கள் அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு, முறையாக தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும், அதற்கான தேர்தல் அலுவலகம் வழங்கிய ஒப்பந்த படிவத்தில் சில கோப்புகளை சரி செய்ய வேண்டும் என தேர்தல் அலுவலர் கொடுத்திருந்தார். அதையும் முறையாக ஒப்படைத்தேன். எல்லாம் சரி என்று சொன்னவர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலின் போது என்னை முன் மொழிந்த வாக்காளர்கள் பட்டியலில் 10 பேரில் ஒருவர் இந்தத் தொகுதியில் இல்லை எனக்கூறி எனது வேட்பு மனுவை நிராகரித்து விட்டனர்.

 

மீண்டும் வேறொருவரது வாக்காளர் அடையாள அட்டையுடன் மனு தாக்கல் செய்தேன். ஆனால், எனது வேட்புமனுவை அவர்கள் ஏற்கவில்லை. ஆனால் இன்று  செய்தித்தாளில் தேர்தல் அலுவலகம் வெளியிட்டு இருந்த அறிவிப்பில் விருகம்பாக்கம் தொகுதி சுயேட்சை வேட்பாளராக எனது பெயரும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

அதனை நம்பி நான் தேர்தல் அலுவலகத்துக்கு சென்று அங்கு ஒட்டப்பட்டிருந்த பட்டியலைப் பார்த்தேன். ஆனால், அந்தப்பட்டியலில் 27 பேர் இருந்தனர். ஆனால் என் பெயர் இடம்பெறவில்லை. செய்தி தாளில் மட்டுமே வெளியாகி இருந்தது. அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்த பட்டியலில் எனது பெயருக்கு பதிலாக பிரபாகரன் பெயர் இடம்பெற்று இருந்தது. ஆனால் செய்தித்தாளில் பிரபாகரன் பெயர் இடம்பெறவில்லை.  இந்த லிஸ்டை செய்தித்தாள் நிறுவனத்துக்கு தேர்தல் அலுவலர் சார்பாகவே தகவலை கொடுத்து இருப்பார்கள். எனது பெயரை வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாமல் போன மன வருத்தத்தில் இருந்த என்னை இந்தக் குழப்படிகள் மேலும் மனவேதனைக்கு ஆளாக்கி இருக்கிறது’’ என்கிறார்.


click me!