மாவட்டச் செயலாளர்கள் மட்டும் அல்ல ஒரே நேரத்தில் 1500 நிர்வாகிகள்..! மு.க.ஸ்டாலினின் மெகா மெகா பிளான்!

By Selva KathirFirst Published Dec 18, 2020, 10:24 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் திமுக நிர்வாகிகள் சுமார் 1500 பேரை ஒரே நேரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் அக்கட்சித் தலைவர் மு.கஸ்டாலின்.
 

சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் திமுக நிர்வாகிகள் சுமார் 1500 பேரை ஒரே நேரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் அக்கட்சித் தலைவர் மு.கஸ்டாலின்.

கடந்த 2011ம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சிப் பொறுப்பை பறிகொடுத்தது திமுக. அதன் பிறகு 10 வருடங்களாக திமுகவால் ஆட்சிப் பொறுப்பிற்கு வர முடியவில்லை. சொல்லப்போனால் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் தான் திமுக சுமார் பத்து வருடங்களில் பெற்ற மிகப்பெரிய தேர்தல் வெற்றி. ஆனால் அதன் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக அடைந்த தோல்வி அதிமுகவின் உண்மையான பலத்தை அக்கட்சிக்கு உணர்த்தியது என்றே கூறலாம். இதனால் அதிமுகவை எளிதாக சட்டப்பேரவை தேர்தலில் வீழ்த்த முடியாது என்கிற முடிவிற்கு திமுக வந்தது.

இதனை தொடர்ந்தே பீகாரைச் சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு சுமார் 330 கோடி ரூபாய் கொடுத்து தமிழகத்திற்கு அழைத்து வந்தது திமுக. இப்படி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று படிப்படியாக காய் நகர்த்தி வரும் திமுக அடுத்து வரும் சில மாதங்களில் வெற்றிக்கனியை பறிக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அத்துடன் தேர்தல் வியூகமும் அதிமுகவை வீழ்த்தும் வகையில் திறமையானதாக இருக்க வேண்டும். என்ன தான் பிரசாந்த் கிஷோரின் டீம் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தாலும் திமுக தனது பாரம்பரிய தேர்தல் வியூகத்தையும் முற்றிலும் கைவிட்டுவிட முடியாது.

எனவே தான் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி பேரூர் செயலாளர்கள் வரை அனைவரையும் தேர்தலுக்கு முன்பாக சந்திப்பது என்று திமுக தலைவர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே திமுக சார்பில் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி, மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி மற்றும் திமுகவின் தலைமை கழக பேச்சாளர் லியோனி, திமுகவை சேர்ந்த நடிகர், நடிகைகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்று தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆனால் இந்த முன்னெடுப்பிற்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு இல்லை. ஊடக வெளிச்சமும் கூட மிக மிக குறைவாகவே உள்ளது. எனவே அடுத்த மாதம் மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ள தேர்தல் பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே இது குறித்து மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் என திமுகவின் சுமார் 1500 நிர்வாகிகளை அழைத்துப் பேச ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். வரும் 20ந் தேதி இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வரக்கூடிய 1500 பேரும் சமூக இடைவெளியுடன் அமரவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து வேட்பாளர் தேர்வு குறித்தும்  அறிவிப்பார் என்கிறார்கள். அத்தோடு தேர்தலில் மாவட்டச் செயலாளர் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடங்கி பேரூர் செயலாளர்கள் வரை அவர்களுக்கான பணிகளை புளுபிரின்ட் போல போட்டுக் கொடுத்து பாடம் எடுக்க உள்ளனர்.

மேலும் தேர்தல் செலவு முறை, கணக்கு வழக்குகள், ஐ பேக் டீமுடன் இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியம் உட்கட்சி தகராறு என அனைத்தையும் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் வெளிப்படையாக பேசுவார் என்று கூறுகிறார்கள். மேலும் கிராமவாரியாக உள்ள பிரச்சனைகளை தெரிந்து தொகுதிக்கு தனித்தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்றும் இதற்கு மாவட்டச் செயலாளர் தொடங்கி ஒன்றியச் செயலாளர் வரை நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக்கப்படுவார்கள் என்கிறார்கள். அதோடு திண்ணைப் பிரச்சாரம் மிக முக்கியம் என்று அறிவுறுத்தப்பட உள்ளது.

என்ன தான் திமுக இந்த பிரமாண்ட ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாலும் கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்களை ஐ பேக் டீம் தான் இறுதி செய்துள்ளதாக கூறுகிறார்கள். ஏற்கனவே ஐ பேக் டீமுடன் திமுக மாவட்டச் செயலாளர்கள் சிலருக்கு பிரச்சனை உள்ளது. தேர்தல் சமயத்தில் இந்த பிரச்சனை வேறு நிர்வாகிகளுக்கும் வரக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடாம்.

click me!