தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் ஆதிக்கம்.. தனியார் நிறுவன வேலைவாய்ப்பு தமிழருக்கே என சட்டம் இயற்றுக.. சீமான்.

By Ezhilarasan Babu  |  First Published Oct 12, 2022, 4:12 PM IST

தனியார் நிறுவனங்களிலும் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 


தனியார் நிறுவனங்களிலும் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம், பணித்தேவைக்காகச் சிறப்பு ரயில் மூலம் 800 இளம்பெண்களை ஜார்க்கண்டிலிருந்து அழைத்துவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் வளங்களை மூலதனமாகக் கொண்டு, தமிழக அரசின் தயவில், தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள், வேலைக்கு மட்டும் வெளி மாநிலங்களிருந்து ஆட்களைப் பணியமர்த்தி, தமிழர்களின் வேலைவாய்ப்பினைத் தட்டிப்பறிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. 

Tap to resize

Latest Videos

ஐம்பதாண்டுகளாக தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் அரசுகளும் பன்னாட்டுக் கூட்டிணைவு நிறுவனங்கள் மூலமே வேலைவாய்ப்பு பெருகும், மக்களின் வறுமை நீங்கும், தமிழ்நாடு அபார வளர்ச்சியடையும் என்று மக்களை நம்பவைத்து, போட்டிப்போட்டு தனியார் பெருமுதலாளிகளைச் சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்துவந்து அதையே பெரும் சாதனையாகவும் விளம்பரம் செய்தன. அதுமட்டுமின்றிப் பல்லாயிரம் கோடிகள் வரிச்சலுகை, குறைந்த விலையில் நிலம், நீர், மின்சாரம், மனிதவளம் என யாவும் அளித்துச் சொந்த நாட்டுத் தொழில் முனைவோரையும், உள்ளூர் சிறுகுறு நிறுவனங்களையும் மொத்தமாக அழித்து முடித்தன.

இதையும் படியுங்கள்: துரைமுருகனின் துச்சாதனன் புத்தி இன்னும் மாறவில்லை.. தெலுங்கு பட வில்லன் போல பேசும் பொன்முடி.. TTV விளாசல்.!

ஆனால், அவ்வாறு நிறுவப்பட்ட தனியார் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு மக்களின் உழைப்பினை உறிஞ்சி அடிமைகள்போலவே பயன்படுத்துகின்றன. தமிழ் மக்களின் உழைப்பினையும், தமிழ் நிலத்தின் வளங்களையும் சுரண்டி தங்களை வளப்படுத்திக்கொண்ட பிறகு திடீரென நிறுவனத்தை மொத்தமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் ஊழியர்களை நட்டாற்றில் விட்டுச் செல்கின்றன. இதனால் வேலைவாய்ப்பும் இழந்து, வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி வறுமையில் வாடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்: ஒரே நாடு ஒரே மொழி.. சங்பரிவாரின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் பாஜக அரசு.. அம்பலப்படுத்தும் ஜவாஹிருல்லா.!

ஆனால், தற்போது அந்தப் பணிகளிலும் தமிழர் அல்லாத வடவர்களையே முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் பணியமர்த்தும்போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளுக்காகக் குடியேறிய வடவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமாகும். சென்னை, கோவை, உள்ளிட்ட மாநகரங்கள், திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் மட்டுமின்றித் தமிழ்நாட்டின் கிராமங்கள் வரை வடவர்களையே பணியமர்த்தும்போக்கு அதிகரித்து வருகிறது.

அவ்வாறு தமிழ்நாட்டிற்கு வரும் பிறமாநிலத்தவர் விரைவாகக் குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று பெற்று நிரந்தரமாகக் குடியேறுகின்றனர். மேலும், வாக்காளர் அட்டையும் பெறுவதால் தமிழ்நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலாகவும் வடவர்கள் உருவெடுத்து வருகின்றனர். இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் யாவும் பறிக்கப்படுவதோடு மட்டுமின்றி எஞ்சியுள்ள அரசியல் அதிகாரத்தையும் வடவர்களிடம் முற்றாக இழந்து, தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே உடைமைகள், உரிமைகளற்ற அகதிகளாக, அடிமைகளாக வாழும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே, தமிழ்நாடு அரசு ஆந்திரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதுபோல் தனியார் நிறுவனங்களிலும் 80 விழுக்காடு வேலையினை மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கே ஒதுக்கத் தனிச்சட்டமியற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இனியாவது, தமிழ்நாட்டில் குடியேறும் பிறமாநிலத்தவரைக் கட்டுப்படுத்த உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமன்றும், அவர்கள் தமிழ்நாட்டில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை பெறுவதற்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்.
 

click me!