சும்மா இஷ்டத்துக்கு பேசாதீங்கப்பா !! கட்சியினருக்கு கடிவாளம் போட்ட ஓபிஎஸ் – இபிஎஸ் !!

By Selvanayagam PFirst Published Jan 13, 2020, 5:42 AM IST
Highlights

கூட்டணி வியூகம் குறித்து அ.தி.மு.க. தலைமைதான்  முடிவு எடுக்கும் என்றும், தனிப்பட்ட கருத்துகளை கட்சியினர் பொது வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்  ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
 

அ.தி.மு.க. தலைமை ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும்,  இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும், , கூட்டாக அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர்.

அதில் அ.தி.மு.க. அமைத்து இருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல் பார்வைகளையும் பொது வெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம்.

மிகுந்த கட்டுப்பாடும், ஒழுங்கும், ஜனநாயக பண்பும் நிறைந்த அ.தி.மு.க. தற்போதைய கூட்டணி குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஆராய்ந்து கட்சியின் கொள்கை கோட்டுபாடுகளின்படி முடிவு எடுப்பார்கள்.

ஜெயலலிதா காட்டிய வழிகளில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளை பற்றிய தனிநபர்களின் விமர்சனங்களும், கருத்துகளும் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி கட்சிக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் அத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கட்சியினர்களை கண்டிப்புடன் நெறிப்படுத்த கடமைப்பட்டு இருக்கிறோம்.

மக்கள் நல பணிகளை திறம்பட ஆற்றி கட்சிக்கு பெருமை சேர்க்கும் வேலைகளில் மட்டுமே கட்சி தொண்டர்கள் இப்போது ஈடுபட வேண்டும். கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு இருப்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் கேட்டுக் கொண்டுள்ளனர்..

click me!