தனி நபராக வந்ததாலும், முன் மொழிய ஆள் இல்லாததாலும் வேட்பு மனு வழங்கப்படவில்லை.. அதிமுக விளக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 3, 2021, 4:40 PM IST
Highlights

அதாவது ஒருங்கிணைப்பாளர் பதவியை பொருத்தவரையில் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருக்கு மட்டுமே வேட்புமனு என்றும், வேறு யாருக்கும் கிடையாது என்றும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூறியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிமுக அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு கேட்டு வந்தவருக்கு வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில், தனி நபராக வந்ததாலும், முன் மொழிய ஆள் இல்லாததாலும் வேட்பு மனு வழங்கப்படவில்லை என அதிமுக தலைமை விளக்கம் அளித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விருப்பமனு கேட்டு அக்கட்சி தலைமை அலுவலகம் வந்த தொண்டரை அங்கிருந்த நிர்வாகிகள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு  தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான வேட்பு மனு வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடதக்கது. 

சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ்  குரல் கொடுக்கப்போகிறார்,எடப்பாடியை எதிர்க்க போகிறார் என பலரும் ஆருடம் கூறிவந்த நிலையில் ஒருவழியாக ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் தங்கள் பதிவியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வருகிற 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். 11ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்து அது  மோதலில் முடிந்தது. அதனால் எந்த முடிவும் அதில் எடுக்கப்படவில்லை. அதில் செங்கோட்டையன், அன்வர்ராஜா போன்ற மூத்த உறுப்பினர்கள் பேசியது கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அன்வர்ராஜாவை கட்டம் கட்டிய ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டு அவரை கட்சியில் இருந்து தூக்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் பொதுச்செயலாளர் பதவியை தவிர்த்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் நேரடித் தேர்தல் மூலம் தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்காக கட்சியின் விதிகளும் திருத்தம் செய்யப்பட்டது. விதிகள் திருத்தம் செய்யப்பட்ட கையோடு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான அறிவிப்பையும் தலைமைக்கழகம் அதிரடியாக அறிவித்ததுள்ளது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம், வேட்புமனு பரிசீலனை 5 தேதி காலை 11 மணிக்கு நடைபெறும், அதேபோல மனு திரும்பப் பெறுதல் 6 தேதி மாலை நான்கு மணி வரையும், ஏழாம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், அதற்கு தேர்தல் ஆணையராக பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் அதிமுக தலைமை கழகத்தில் விருப்ப மனு இன்று தொடங்கியது. அப்போது விருப்ப மனு வாங்க வந்த நபரை அங்கிருந்த இபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விரட்டியடித்தனர். அதாவது நடைபெற உள்ள ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வட சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஆஇஅதிமுக தொண்டர் ஓமப்பொடி பிரசாத் சிங்  விருப்ப மனு பெற வந்தார். அப்போது ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான வேட்புமனு கோரினார். ஆனால் அவருக்கு வேட்புமனு மறுக்கப்பட்டது. இதனால் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த போதே அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள், அவரை விரட்ட தொடங்கினர். பின்னர் அவரை அதிமுக அலுவலகத்தை விட்டு வெளியில் தள்ளினார். பிறகு அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். 

அதாவது ஒருங்கிணைப்பாளர் பதவியை பொருத்தவரையில் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருக்கு மட்டுமே வேட்புமனு என்றும், வேறு யாருக்கும் கிடையாது என்றும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூறியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் என்பது ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும்.. விருப்பமனு கொடுக்க வந்த நபரை தாக்குவதுதான் அதிமுகவின் ஜனநாயகமா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுத்தொடர்பான அதிமுக தலைமையிடம் விளக்கம் கேட்டபோது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் என்பதால் தனியாக வருபவர்களுக்கு வேட்பு மனு அளிக்க இயலாது என்றும், முன்மொழிய வழிமொழிய ஆட்கள் தேவை எனவும், அவர்களும் 5 ஆண்டுகள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் எனவும், வந்தவருக்கு இது இல்லாததால் வேட்பு மனு அளிக்கவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!