அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடைவிதிக்க முடியாது.. நீதி மன்றம் அதிரடி..

By Ezhilarasan BabuFirst Published Dec 3, 2021, 4:17 PM IST
Highlights

கே.சி.பழனிசாமி தரப்பில்,  தேர்தலை 5 நாளில் அதிமுக நடத்தும்போது, பதில்மனுவை  2 நாளில் தாக்கல் செய்ய முடியும் என்றும், வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கவும், அதுவரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தப்பட்டது. பதிலளிக்க நீண்ட அவகாசம் வழங்கினால், ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பிலும், காவல்துறை பாதுகாப்புடனும் தேர்தல் நடத்த வேண்டுமென இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்காலத்தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. விதிகளை பின்பற்றாமல் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலை ரத்து செய்யக்கோரி முன்னாள் எம்.பி.யும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு அவசர வழக்காக நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது,  2018ல் நீக்கப்பட்ட பிறகு அதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் எப்படி வழக்கு தொடரமுடியும் என கேள்வி எழுப்பினார்.

கே.சி.பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜராகி தன்னை நீக்கிய பிறகுதான ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் தன்னை நீக்கம் செய்தது செல்லாது என்பதால் வழக்கு தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டது. விதிகளை மீறி தேர்தல் அறிவிக்கபட்டுள்ளதாகவும்,  தன்னைப்போல 27000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வழக்கில் இணைய தயாராக உள்ளதாக தெரிவித்தார். விருப்ப மனு வழங்கப்படாமல் வெளியேற்றப்பட்ட பிரசாத் சிங் ஆஜராகி விதிகளை பின்பற்றாமல் 5 நாட்களில் தேர்தல் நடைமுறையை முடிக்க முயற்சி நடப்பதாகவும், விருப்பமனு வாங்க சென்றபோது வெளியில் துரத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி : இன்று வழக்கு தொடராவதவர்கள் வாதிட முடியாது என்றும், எதிர்தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும், எதிர் தரப்பு விளக்கம் அளித்த பிறகு வழக்கு முகாந்திரம் இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் தயங்காது எனவும் தெரிவித்தார். அதிமுக மற்றும் அதன் நிர்வாகிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், அரவிந்த் பாண்டியன், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி மூன்றாண்டுகளாக கட்சியுடன் தொடர்பில்லாதவர் எப்படி வழக்கு தொடர முடியும் என்றும், நீக்கத்தை எதிர்த்து சிவில் வழக்காக தொடர்ந்த, வென்று, பின்னர் இந்த வழக்கை தொடரலாம் என விளக்கம் அளித்ததுடன், வழக்கில் பதிலளிக்க அவகாசம் கோரினர்.

கே.சி.பழனிசாமி தரப்பில்,  தேர்தலை 5 நாளில் அதிமுக நடத்தும்போது, பதில்மனுவை  2 நாளில் தாக்கல் செய்ய முடியும் என்றும், வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கவும், அதுவரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தப்பட்டது. பதிலளிக்க நீண்ட அவகாசம் வழங்கினால், ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பிலும், காவல்துறை பாதுகாப்புடனும் தேர்தல் நடத்த வேண்டுமென இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்ப்பையும் கேட்காமல் இடைக்காலத்தடை விதிக்க முடியாது என்றும், மனுதாரர் விருப்பப்பட்டால் மனுவை  தள்ளுபடி செய்வதாகவும், மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள் என தெரிவித்தார். அதேசமயம் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து நிர்வாகிகள் தேர்வு வரை சட்ட விதிமீறல் இருப்பது தெரியவந்தால், தேர்தல் முடிவுகளை ரத்துசெய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

பின்னர் வழக்கு குறித்து அதிமுக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அதிகாரிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இது ஒபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!