மனசாட்சி உள்ளவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை குறை கூற மாட்டார்கள் என சென்னை கொளத்தூரில் அமைச்சர் பி.கே சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவக்கி வைத்தார். இதனையெடுத்து சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் பள்ளி மைதானத்தில் பத்தாயிரம் சதுர அடி பரப்பில் ரோஜா மலர்கள் தூவப்பட்டிருந்தன.
இதன் மையப் பகுதியில் ஆயிரம் மாணவிகள் கையில் பூங்கொத்துகளுடன் ஆயிரம் என்ற எண்ணை வடிவமைத்து அமர்ந்திருந்தனர். இவர்கள் பூங்கொத்துகளை பல்வேறு கோணங்களில் அசைத்து நன்றி தெரிவித்தது கண்ணை கவரும் வகையில் இருந்தது. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல்வருக்கு நன்றி என்ற வாசகங்களை ஆயிரம் கிலோ சாமந்தி மற்றும் ரோஜா மலர்களைக் கொண்டு வடிவமைத்திருந்தனர்.
காவிரி விவகாரத்தில் 10 முதல்வர்களை பார்த்துவிட்டேன்; கர்நாடகாவுக்கு துரைமுருகன் கண்டனம்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் மட்டுமல்ல, ஒன்றியம் மட்டும் அல்ல உலகமே உற்றுப் பார்க்கும் அளவிற்கு மகளீர்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை வழங்குகின்ற திட்டத்தை நேற்றைக்கு காஞ்சிபுரத்தில் முதல்வர் துவக்கி வைத்து ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கி சரித்திரத்தில் இடம்பெற்றார்.
தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பை ஏற்ற நாள் முதல் கொரோனா காலகட்டத்தில் நான்காயிரம் ரூபாய் அறிவித்த நாளாக இருந்தாலும் சரி. மகளிருக்கு விடியல் பயணம் என்றாலும் சரி. சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி என்றாலும் சரி, நகைக்கடன் தள்ளுபடி என்றாலும், நான் முதல்வர் திட்டம் என்றாலும், கல்லூரி ஊக்கத்தொகை திட்டம் என்றாலும், பெண்ணினத்தின் முன்னேற்றத்திற்காக, பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்ற முதலமைச்சரை இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து தாய்மார்களும் பாராட்டி புகழ்ந்து போற்றுகின்றனர்.
இனி மருந்து வாங்க யாரையும் எதிர்பாக்க மாட்டேன்; உதவித் தொகையை பெற்ற பெண் நெகிழ்ச்சி
இதனை பார்க்கும்போது நீண்ட நெடிய உடல் ஆரோக்கியத்துடன் அவர் தொடர்ந்து நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை தருகின்றது. அந்த வகையில் சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்தை ஒட்டுமொத்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களும் செயல்படுத்துவதற்கு ஆர்வத்தோடு உள்ளார்கள். இது நமது முதல்வருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் உள்ளது. ஒரு பெரிய திட்டம் செயல்படுத்துகின்ற போது சிறு சிறு பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஓரிருநாளில் அது சரி செய்யப்பட்டு விடும்.
முதல்வரின் ஓராண்டு தொடர் நடவடிக்கையால் ஒவ்வொரு பிரச்சினையும் அவரே நேரடியாக அணுகி பிரச்சினைகளை தீர்த்து வைத்து வருகிறார். அந்த வகையில் நேற்று இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கினாலும் நேற்றைய முந்தினமே பலருக்கும் இந்த திட்டத்தின் வாயிலாக பணம் சென்றடைந்து விட்டது. இதனால் இந்த திட்டத்தை பற்றி எந்தவித குறைகளும் கூற முடியாதவர்கள் ஏதாவது கிடைக்குமா என எதிர்பார்க்கிறார்கள். முதல்வரின் கனவு திட்டம், முதல்வரின் தொலைநோக்கு திட்டம். இது முதல்வரின் திட்டமிடலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மனசாட்சி உள்ள யாரும் இந்த திட்டத்தை குறை சொல்ல மாட்டார்கள் என தெரிவித்தார்.