மூன்றாவது அணியெல்லாம் இல்லப்பா !!  காங்கிரசுக்கு ஓகே சொன்ன திமுக !!

First Published Jun 25, 2018, 1:13 PM IST
Highlights
No third front dmk announced alliance with congress


அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியில் திமுக இடம் பெறாது என்றும், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அதிரடியாக அறிவித்தார். திமுக மூன்றாவது அணிக்கு சென்றுவிடும் என பேசப்பட்டுவந்த நிலையில் அதற்கு அக்கட்சி  தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு  தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. இதே போல் காங்கிரஸ், பாஜக இல்லாத மூன்றாவது அணியை உருவாக்கி தேர்தலை சந்திக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இது தொடர்பாக கெஜ்ரிவால், சரத்பவார், சந்திர சேகர ராவ், திமுக எம்.பி.கனிமொழி போன்ற முக்கிய தலைவர்களை சந்தித்து மூன்றாவது அணி அமைப்பது குறித்து பேசினார்.

இதே போன்று தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேக ராவ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மூன்றாவது அணி குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திமுக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்தது காங்கிரசை கழற்றிவிட்டுவிடும் என பரவலாக பேச்சு அடிபட்டது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடப் போவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த திமுக முதன்மைச் செயலாளர் துரை முருகன்,   மூன்றாவது  அணியில் தி.மு.க. ஒரு போதும் இடம் பெறாது என்றும்       . காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெரிவித்தார்..

கருணாநிதி உடல் நலம் இல்லாமல் செயல்பட முடியாதபடி இருப்பதால், அவர் இல்லாத வெற்றிடத்தை உணரத் தொடங்கியுள்ளோம். அவர் மட்டும் முன்பு போல அரசியலில் தீவிரமாக இருந்திருந்தால், அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவை அவர் வேறு விதமாக கையாண்டிருப்பார். மாறுபட்ட திட்டத்துடன் களம் இறங்கி இருப்பார் என துரை முருகன் தெரிவித்தார்.

தற்போதைய அ.தி.மு.க. அரசு முற்றிலுமாக மத்திய அரசிடம் சரண் அடைந்து கிடக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி மீதான ஏராளமான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் துரை முருகன் தெரிவித்தார்.

click me!