ஸ்டெர்லைட் ஆலை மட்டும் திறந்திருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது !! சட்டப் பேரவையில் பொங்கிய தங்கமணி…..

First Published Jun 8, 2018, 6:39 PM IST
Highlights
No sterlite No copper electricity works are pending


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தமிழகத்தில் உள்ள மின்மாற்றிகளுக்கான காப்பர் கிடைப்பதில்லை என்றும்  தற்போது வேறு இடங்களில் இருந்து காப்பர் வாங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற ஊர்வலத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு அப்பாவிப் பொது மக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டது.

இந்த ஸ்டெர்லைட் ஆலையில் இருந்துதான் இந்தியாவுக்குத் தேவையான 48 சதவீத காப்பர் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த காப்பரை வைத்துதான் மின் மாற்றிகள், மின் ஒயர்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது , திருவெற்றியூர் தொகுதியில் பறவை அமர்ந்தால் கூட மின்மாற்றி பழுதாகிறது என்றும் அதனை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்திற்கு தேவையான மின்மாற்றிகளை அமைக்க ஸ்டெர்லைட் ஆலையில் இருந்துதான் இது வரை காப்பர் பெறப்பட்டு வந்தது. தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால் மின்மாற்றிக்கு தேவையான காப்பர் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

இதனால் மாற்று இடத்தில் இருந்து காப்பர் வாங்கி, மின்மாற்றிகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் தேவையான இடங்களில் மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தான் மின்மாற்றிகள் அதாவது டிரான்ஸ் பார்மர்கள்  பழுது பார்க்க முடியாமல் இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களை அதிர வைத்துள்ளது.

click me!