BE படிப்புக்கு மரியாதையே இல்லை.? கலந்தாய்வில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்,தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கதறல்.

By Ezhilarasan BabuFirst Published Oct 21, 2020, 12:09 PM IST
Highlights

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் இரு கட்ட கலந்தாய்வு ஆகியவை முடிவில் மொத்தமாக 21,422 இடங்களே நிரம்பி உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு  நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 21,422 இடங்களே நிரம்பி உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,63,154 இடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 497 இடங்கள் நிரம்பின. 

 

கடந்த 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற்ற பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வில் 7,510 இடங்கள் நிரம்பின. கடந்த 12 முதல் 19 ஆம் தேதி மாலை வரை நடைபெற்ற 2-ம் கட்ட கலந்தாய்வு முடிவில் 13,415 இடங்கள் நிரம்பின. சிறப்புப் பிரிவு கலந்தாய்வு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் இரு கட்ட கலந்தாய்வு ஆகியவை முடிவில் மொத்தமாக 21,422 இடங்களே நிரம்பி உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

3-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 35,133 பேருக்கும், 4-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 40,573 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கலந்து கொள்பவர்களுக்கு இனி வரும் நாட்களில் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய உடன், ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பித்ததாகவும், ஆனால் கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான இடங்கள் நடப்பு கல்வியாண்டிலும் காலியாகவே இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

click me!