
கொரோனா அச்சுறுத்தலால் மத ஊர்வலங்களுக்கு மத்திய அரசு அனுமதிக்கவில்லை; அதனை தமிழக அரசு பினபற்றுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டியளித்த முதல்வர்;- தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. இறப்பு விகிதம் குறைவு என்றார். நேற்று வரை 39 லட்சத்திற்கு மேற்பட்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் முகாம்களால் தமிழகத்தில் நோய் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு இருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படுகிறது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுகின்றன. 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் பற்றி முதல்வர் விளக்கமளித்தார். வேலூரில் மிகப்பெரிய பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. வேலூரில் நிலம் எடுக்கப்பட்டவுடன் புறவழிச்சாலை பணிகள் தொடங்கும் என்றார்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் ஆட்சியர் அலுவலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் எந்த மத வழிபாட்டு ஊர்வலங்களுக்கும் அனுமதியில்லை. விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் உயர்நீதிமன்ற அறிவுரைப்படி தமிழக அரசு செயல்படும். பாஜக அரசின் அறிவிப்பின்படிதான் தமிழக அரசு செயல்படுகிறது என எச்.ராஜாவுக்கு முதல்வர் பதிலளித்துள்ளார்.