என்னை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை… ஸ்டாலினுக்கு காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்குது…. கொந்தளித்த எஸ்.வி.சேகர்…

By Selvanayagam PFirst Published Sep 24, 2018, 6:56 AM IST
Highlights

ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக, கோர்ட் வழக்கு பதிவு செய்தபின், மீண்டும் அதே குற்றத்திற்காக, போலீசார் கைது செய்ய சட்டத்தில் இடமில்லை என்பது, சாதாரண பாமர மனிதர்களுக்கே தெரியும், ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு அது ஏன் தெரியாமல் போனது என கேள்வி எழுப்பிய எஸ்.வி.சேகர், அவருக்கு காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்குது என குற்றச்சாட்டினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த எம்எல்ஏ கருணாஸ் சாதி வெறியைத் தூண்டிவிடும் வகையில் பேசியதாகவும், காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்தாகவும் கூறி இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை  ஊர்வலத்தின்போது, பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், போலீசாருக்கு மிரட்டல் விடுத்தும் பேசினார். மேலும் இந்து அறநிலையத்துறையில் பணி புரியும் ஊழியர்களையும் கேவலமாகப் பேசினார்.

இதே போல்  பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை ஆளுநர் புரோகித் கன்னத்தை தொட்ட விவகாரத்தில், பெண் பத்திரிக்கையாளர்களை கேவலமாக சித்தரித்து நடிகர் எஸ்.வி.சேகர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் அவர் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எச்.ராஜா மீது தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடவில்லை. இதனால் கருணாசுக்கு ஒரு நீதி, ராஜா மற்றும் எஸ்.வி. சேகருக்கு  ஒரு நீதியா ? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர் , ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக, கோர்ட் வழக்கு பதிவு செய்தபின், மீண்டும் அதே குற்றத்திற்காக, போலீசார் கைது செய்ய சட்டத்தில் இடமில்லை என்பது, சாதாரண பாமர மனிதர்களுக்கே தெரியும். ஆயினும், தொடர்ந்து, என் மீது ஸ்டாலின் குற்றம் சாட்டுவதற்கு, பா.ஜ., மீதான காழ்ப்புணர்ச்சி, அவரது கண்ணை மறைப்பதே காரணம்.என தெரிவித்தார்.

click me!