போலீஸ் ஸ்டேஷன் சூறை… தீ வைப்பு … ஆந்திராவில் பதற்றம் !!

By Selvanayagam PFirst Published Sep 24, 2018, 6:25 AM IST
Highlights

ஆந்திராவில் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்..வின் ஆதரவாளர்கள் காவல்நிலையங்களுக்குத் தீ வைத்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து  மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் அரகு தொகுதி தெலுங்கு தேச எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வரா ராவ். இவரும், அதே கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் கிராம பகுதியில் மக்களை சந்திக்க காரில் சென்றனர்.

லிப்பிடிபுட்டா என்ற கிராமத்துக்கு அவர்கள் சென்ற போது கிராம மக்கள் ஏராளமானோர் காரை மறித்தனர். உடனே எம்.எல்.ஏ. பாதுகாப்புக்கு சென்ற துப்பாக்கி ஏந்திய போலீசாரும் அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றனர்.

அப்போது காரில் இருந்து கிடாரி சர்வேஸ்வரா ராவ், சிவேரி சோமா ஆகியோர் இறங்கி அவர்களிடம் குறைகளை கேட்க முயன்றனர். திடீரென அந்த கூட்டத்தில் இருந்த சிலர் போலீசாரின் கையில் இருந்த துப்பாக்கியை பறித்து கிடாரி சர்வேஸ்வரா ராவையும், சிவேரி சோமாவையும் சரமாரியாக சுட்டனர்.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர். இதையடுத்து கூட்டத்தில் இருந்த மாவோயிஸ்டு அமைப்பினர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தற்போது அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மாவோயிஸ்டுகளின் இந்த செயலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

 

இந்நிலையில் கிடாரி சர்வேஸ்வர ராவ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி, எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் தும்பரிகுடா காவல் நிலையத்திற்கு தீ வைத்துள்ளனர்.

 

தீ வைப்பதைத் தடுக்கச் சென்ற காவலர்களையும் ஆத்திரமுற்ற ஆதரவாளர்கள் தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர்.

 

மேலும் காவல்நிலையத்துக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ரெட் அலெர்ட் என்ற உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

click me!